Home »
» பிளஸ் 1 மாணவர் சேர்க்கை சரிவு:கவனிக்குமா கல்வித்துறை.
கிராமப்புற அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர் சேர்க்கை
நடப்பாண்டில் குறைந்துள்ளது; எண்ணிக்கையை அதிகரிப்பதில், கல்வித்துறை
தீவிரம் காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து, பிளஸ் 1 வகுப்புகள் நேற்று முதல்
துவங்கியுள்ளன. உடுமலை சுற்றுப்பகுதியில் அனைத்து அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளிலும் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
கல்வியாண்டிலும், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க
பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் இந்நிலை
ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டிலும், நடப்பாண்டிலும், உடுமலை
சுற்றுப்பகுதி கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கியே
செல்கிறது. அப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும்
நிலையிலும், பெற்றோரின் ஆர்வம் அரசு பள்ளிகளின் பக்கம் இருப்பதில்லை.
பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும், பொறியியல் மற்றும் மருத்துவ
படிப்புகளுக்கு தேவையான 'கட் ஆப்' மதிப்பெண் உள்ளிட்ட காரணங்களால், பத்தாம்
வகுப்பு வரை, அரசு பள்ளிகளை தேர்வு செய்யும் பெற்றோர், மேல்நிலை
வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
பிளஸ் 1 வகுப்பிலேயே பிளஸ் 2 பாடதிட்டம், என இரண்டாண்டுகளும் ஒரே
பாடதிட்டத்தை படிப்பதால் மதிப்பெண் அதிகரிக்கும் என பெற்றோரும்
கண்டுகொள்வதில்லை.
இதனால், பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். அரசு பள்ளிகளில் பயின்று, தனியார்
பள்ளிகளுக்கு இடம்மாறும் மாணவர்களில் ஐம்பது சதவீததுக்கும் மேற்பட்டோர்
மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மனப்பாட கல்விமுறையை ஏற்க முடியாத
மாணவர்கள், இறுதிவரை அதே மனநிலையில் படித்து பொதுத்தேர்வில்
கோட்டைவிடுகின்றனர்.
கிராமப்புற மேல்நிலைப்பள்ளிகளையே பெற்றோர் பெரிதும் புறக்கணிக்கின்றனர்.
மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சரிவதை கல்வித்துறையும் அலட்சியமாக
விடுவதால், பள்ளிகளிலும் பெரிதளவில் முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை.இதனால்,
ஒவ்வொரு கல்வியாண்டிலும், குறிப்பாக கிராமப்புற மேல்நிலைப்பள்ளிகளில்,
எண்ணிக்கை குறைந்தே வருகிறது. மேல்நிலைப்பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையை
அதிகரிப்பதில், கல்வித்துறை தீவிரம் காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...