தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள்
மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.'இந்த பள்ளிகள் மற்றும்
கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக
நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும்.
இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள், அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிலும் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகெங்கும் பணியாற்றலாம்.ஆனால், நர்சிங் கவுன்சிலின் அனுமதி பெறாமல், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவக் சமாஜ்' என்ற அமைப்பின் அங்கீகாரம் பெற்றதாகவும், தமிழகத்தில் போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன.மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, பல்வேறு படிப்புகளையும் இவை நடத்துகின்றன.
மாணவ, மாணவியர், இத்தகைய நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.அதனால், 'உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலுக்கு, பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை மூடுவதற்கான கள ஆய்வில், தமிழ்நாடு நர்சிங்கவுன்சில் இறங்கியது. இதில், தமிழகம் முழுவதும், 1,800க்கும் மேற்பட்ட போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது தெரிந்தது.இந்நிலையில், 'போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும், பயிற்சி அளிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 10 நாட்களுக்குள் இதைச் செய்யத் தவறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்க, 373 கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் மட்டுமே முறையான அனுமதி பெற்றுள்ளன; மற்றவை போலியானவை.பாரத் சேவக் சமாஜ் அனுமதி பெற்றதாகக் கூறி நடத்தப்படும்நர்சிங் பயிற்சி பள்ளிகள், அங்கீகரிக்கப்படாதவை.அனுமதி பெற்ற நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் பற்றிய விவரங்களை, www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கவர்ச்சி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
துாங்கி வழிந்தது ஏன்?:
தமிழகத்தில், 10 ஆண்டுகளாக புற்றீசல் போல, போலி நர்சிங் பள்ளிகள் துவக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதித்துள்ளது. அவர்கள், எந்த வேலைக்கும் போக முடியாமல் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்; நிறைய பணத்தையும் இழந்துள்ளனர்.அந்த போலி நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் துாங்கி வழிந்தது ஏன் என, தெரியவில்லை. இனியாவது, இதுபோன்ற அவலம் தொடராமல் இருந்தால் சரி.சுகாதார ஆர்வலர்கள்'கவனம் செலுத்தவில்லை': டாக்டர்களின் தேவையை விட, நர்ஸ்களின் தேவை பல மடங்கு உள்ளதை உணர்ந்த கேரளா நர்சிங் கவுன்சில், உலகம் முழுவதும் நர்சுகளை அனுப்பும்வகையில் திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகநர்சிங் கவுன்சில், சரியாக கவனம் செலுத்தவில்லை. தேவைக்கேற்ப அரசு நர்சிங் பள்ளி, கல்லுாரிகளை உருவாக்குதல்; கூடுதல் இடங்களை ஏற்படுத்துதல்; பயிற்சி மையங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால் இதுபோன்ற சிக்கல்கள் தீரும்.எஸ்.இளங்கோதமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்.
அங்கீகாரமற்ற படிப்புகள் எவை?
தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மற்றும் அங்கீகாரம் பெறாத படிப்புகள் விவரம்:
அங்கீகாரமுள்ளவை:
* பி.எஸ்சி., நர்சிங் - நான்கு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் - மூன்று ஆண்டு
* டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் - இரண்டு ஆண்டுஇவை மூன்றும், பிளஸ் 2 படித்த பின் படிக்கலாம். இதை முடித்தோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகம் முழுவதும் பணியாற்றலாம்.
அங்கீகாரமற்றவை:
* டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் - 6 மாதம் அல்லது இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் - இரண்டு ஆண்டு
* வில்லேஜ் ஹெல்த் நர்சிங் - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் எய்டு - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு
* சர்ட்டிபிகேட் இன் நர்சிங் - ஒரு ஆண்டு
* அட்வான்ஸ் டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு
* டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு
* நர்ஸ் டெக்னீஷியன்; ஹெல்த் கைடு; சர்டிபிகேட் இன் ஹெல்த் அசிஸ்டென்ட், சர்டிபிகேஷன் இன் பெட்சைடு அசிஸ்டென்ட், சர்டிபிகேட் இன் பேஷன்ட் கேர், சர்டிபிகேட்இன் ஹோம் ஹெல்த் கேர் என்ற, ஆறு மாத மற்றும் மூன்று மாத படிப்புகள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...