டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கானத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் கே.அருள்மொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், மாநிலம் முழுவதும் வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 172 காலிப் பணியிடங்களுக்கு 11,165 பேர் விண்ணப்பித்திருந்தனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 857 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 325 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் டாக்டர் கே.அருள்மொழி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நம்பகத்தன்மையுடன் அனைத்துத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. எனவே, தேர்வு எழுதும் அனைவரும் நம்பிக்கையுடன் படித்து தேர்வு எழுதலாம். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வையொட்டி, தேர்வு மையங்களில் பாதுகாப்புப் பணியில் தேவையான அளவு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மின்சார வசதிகள் செய்யப்பட்டன. தேர்வு அமைதியாக நடைபெறவும், முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் முதல் தற்போது வரையில் 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் நடந்த குரூப் 1 தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக வெளியிடப்படவில்லை. குரூப் 1, குரூப் 2, வி.ஏ.ஓ. ஆகிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 2016-17-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்வு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.Revision Exam 2025
Latest Updates
Home »
» குரூப் 1, 2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...