8 லட்சம் பேர் பரிதவிப்பு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2015, மே 31ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தியது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்பதால் சுமார் 8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இத்தேர்வின் முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜூலை வரை வெளியிடப்படவில்லை. அதன்பிறகு, 'எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 'ஒரு காலியிடத்துக்கு 5 பேர்' என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. நேர்காணலில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 10 மதிப்பெண்கள், உயர் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண்கள், பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்கள், கேள்வி-பதிலுக்கு 8 மதிப்பெண்கள் என மொத்தம் 25 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது. எழுத்துத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்றும் அறிவித்தார்கள். இது, தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் கொதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். "எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளாமல் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பணி நியமனம் நேர்மையாக இருக்காது; ஊழலுக்கு வழி வகுக்கும், எனவே, குரூப்-IV தேர்வுக்கான நடைமுறைகளைப் போல, நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணி நியமனம் செய்யவேண்டும்" என்று அந்த வழக்கில் கோரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், "ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு தேவையில்லை. எழுத்துத்தேர்வு மதிப்பெண்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றுவரை அரசு அதை நிறைவேற்றவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்வு எழுதியவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். "உயர்நீதிமன்ற உத்தரவு வந்து 6 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு முடிவும் வெளியிடவில்லை; பணி நியமனமும் நடைபெறவில்லை. இதுபற்றி பள்ளிகல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டால், "அரசு உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே முடிவை வெளியிடத் தயாராக இருக்கிறோம்" என்கிறார்கள். இந்த குளறுபடிக்கு பின்னால் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பலகோடி ரூபாய் பணம் பரிமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நேர்காணல் மூலம் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சத்தில் இருந்து 7 லட்சம் வரை பலரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். பல அரசியல் பிரமுகர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். பி.எட்., படித்தவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வானால் துறை ரீதியாக பிரமோஷன் பெற்று ஆசிரியராகி விடலாம். மாத சம்பளம் 18,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். அதனால் தான் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இப்போது உயர்நீதிமன்றம் தலையிட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சுமார் 5000 பள்ளிகளின் ஆய்வகங்களில் ஆசிரியர்கள், உதவியாளர்கள் இல்லாததால் இந்தாண்டு தேர்வெழுதிய 10ம் வகுப்பு, +2 மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்கள் பதைபதைப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். (மாணவர்களின் நலன் கருதி இப்பதிவை வெளியிடுவது கல்விக்குரல் வலைதளம் )ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதால், தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதி பெற்று அரசு தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அரசு மனது வைக்குமா என்ற கேள்வியில் தான் தேர்வெழுதிய 8 லட்சம் பேரின் எதிர்காலம் தொக்கி நிற்கிறது.'' என்கிறார்....
மனது வைக்குமா அரசு?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...