தேர்தல் பணியின்போது வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஆசிரியர் செல்வராஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மன்றப் பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிக நெடுந்தொலைவில் பயிற்சி, வாக்குச்சாவடி பணி அளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், மே 16-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே புங்கமுத்தூர் காந்தி கலாநிலையமேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஆர். செல்வராஜ் காங்கேயம் அருகே காங்கேயம்பாளையம் வாக்குச்சாவடி அலுவலராகப் பணியாற்றினார். அப்போது, வாக்குச்சாவடியிலேயே செல்வராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக தேர்தல் ஆணையம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். அத்துடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் அவரது மகளின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவரின் மனைவிக்குத் தகுதியான அரசுப் பணியையும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...