Home »
» தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்..! முதல்வர் ஜெயலலிதா உறுதி
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். "வெற்றி
மீது வெற்றி வந்து என்னைச் (நம்மைச்) சேரும்" என்ற புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்
தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான
வெற்றியை அளித்து, என்னை மீண்டும் தொடர்ந்து முதலமைச்சராக தேர்ந்தெடுத்து,
ஒரு சரித்திரச் சாதனையை ஏற்படுத்திய எனதருமை தமிழக மக்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த
வெற்றியை எனக்கு அளித்த பெருமை தமிழக மக்களாகிய உங்களையே சாரும். இந்த
வெற்றியை எனக்கு அளித்த தமிழக மக்களின் பால் எனக்கு எழுகின்ற உணர்ச்சிப்
பெருக்கு, உள்ளத்தில் எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில்
வார்த்தைகளே இல்லை.
தி.மு.க-வின்
பொய் பிரசாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான
ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர
முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு
கேட்டவர்களை குழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை
நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக்
கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.
என்
மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று,
மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான்
நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில்
அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்;
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க
தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி
அளிக்கிறேன்.
எம்.ஜி.ஆருக்குப்
பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே
வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், இந்தத் தேர்தலில்
மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், "கருமமே
கண்ணாயினார்" என்பதற்கேற்ப, ஓயாமல் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த
ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான, எனது அருமை கழக உடன்
பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும்,
தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புதுச்சேரி
யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத்
தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...