Home »
» ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடரும்: ஜெயலலிதா.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்ற பிரிவினருக்கு பள்ளிகளில் 25
சதவீதம் இடம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர்
ஜெயலலிதா கூறினார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இன்று மாலை நடைபெற்ற
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: ஏழை மக்கள் பொருளாதார
வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும்
மாணவர்கள் இடையூறின்றி கல்வி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்விக் கட்டணம் ரத்து, விலையில்லா
பாடநூல்கள், விலையில்லா நோட்டு புத்தகங்கள், கணித உபகரணப்பெட்டி,
கிரையான்ஸ், அட்லஸ் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக
ஆட்சியில் மாணவர்களுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில்,
அதிமுக ஆட்சியில் 4 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர
மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சுவையான
சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாக
சென்று வரும் வகையில் விலையில்லா மிதிவண்டி பேருந்து கட்டண சலுகை
வழங்கப்படுகிறது. தற்போது மேல்நிலை மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு
மட்டுமே மடிக்கணினி மற்றும் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என திமுக
தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. அத்திட்டம் ஓராண்டுக்கு மட்டுமே
செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக
ஆட்சியில் மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா
மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்
அவர்களுக்கு இலவசமாக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 54
புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் தலைமுறையாக
கல்லூரியில் பயிலும் 2,05,000 மாணவர்களுக்கு கல்வி கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்
கீழ் நலிவுற்ற பிரிவினருக்கு பள்ளிகளில் 25 சதம் இடம் வழங்கும் திட்டம்
தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதுகுறித்து திமுக ஏதும் தெரிவிக்கவில்லை.
முதலமைச்சரின் விரிவானக் காப்பீடு திட்டம் கடந்த திமுக ஆட்சியில்
செயல்படுத்தப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் ரூ. 1
லட்சம் வரை சிகிச்சைப் பெற முடியும். அதிமுக ஆட்சியில்
அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 4
ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் வரை சிகிச்சைப் பெற முடியும். ஏழை மக்களுக்கும்
தரமான மருத்துவ வசதி பெறும் வகையில் இத்திட்டம்
விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் பழைய காப்பீடு
திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்
தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில்
தற்போதைய அதிமுக ஆட்சியில் மருத்துவக் காப்பீடு திட்டம் அரசு காப்பீடு
நிறுவனம் மூலமே நடத்தப்படுகிறது என்றார் ஜெயலலிதா.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...