Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!

      நவீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது. 
 
          நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், தோள் பை, செருப்பு, செல்போன் உறை என அனைத்திலும் புதுவிதமான ஃபேஷன் வந்துள்ளதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தலைமுடி, உடை, ஒப்பனை என நவீன ரகக் கண்டுபிடிப்பபில் நம்மை நாம் இணைத்துக்கொண்டுள்ளோம் என்பதற்கு, இன்றைய ஃபேஷன் டெக்னாலஜி வெளிப்படுத்தும் புத்தம் புது கண்டுபிடிப்புகளே சான்று.
பணத்தை எண்ணித் தரமால், அள்ளித் தரக்கூடிய துறை தகவல் தொழில் நுட்பத் துறை மட்டுமல்ல, வேறு பல படிப்புகளும் உள்ளன.  கை நிறைய சம்பளத்துடன் உடனடி வேலை என்ற உத்தரவாதத்துடன் இருக்கும் சில படிப்புகள் குறித்த விவரங்கள் இங்கே....

ஃபேஷன் டெக்னாலஜி – கலர்ஃபுல் கோர்ஸ்
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT - National Institute of Fashion Technology), மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் கல்வி நிறுவனம். தலைநகரை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 14 முக்கிய நகரங்களில் செயல்பட்டுவருகிறது.
மாணவர் சேர்க்கை முறை
நான்கு வருட இளங்கலை பட்டப் படிப்பும், இரண்டு வருட முதுகலை பட்டப் படிப்பும் டிசைன் துறையில் வழங்குகிறது நிப்ட். இதில் பி.டெஸ் எனப்படும் இளங்கலை டிசைன் பட்டப் படிப்புக்கும், எம்.டெஸ் எனப்படும் முதுகலை டிசைன் பட்டப் படிப்புக்கும் மாணவர்கள், CAT(Creative Ability Test) மற்றும் GAT(Genral Ability Test) முதலிய தேர்வுகள் எழுதியிருக்க வேண்டும்.
இதில் தகுதி அடையும் மாணவர்களுக்கு நிப்ட் தனியாக எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
வேலைவாய்ப்பு:
ஃபேஷன் மற்றும் டிசைன் துறை மாணவர்களுக்கு தற்போது அதிகமான பணி இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல முன்னணி நிறுவனங்களும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த  இந்தியக் கலை மற்றும் ஊடகத் துறையிலும் எண்ணிலடங்கா வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆடை வடிவமைப்பில் பல்வேறு வடிவங்களின் மூலம் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர முடியும்.


காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (டிப்ளமோ படிப்புகள்)

வளர்ந்துவரும் ஃபேஷன் உலகில்,  காலணிகளும் நமது அழகு மற்றும் மதிப்பைக் கூட்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. 
“எனது காலணிகள்... எனது பெருமை" எனப் பேசியபடியே தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிகைகள் உலா வருவதை  பார்த்திருப்போம். அப்படிபட்ட காலணிகளை வடிவமைப்பது பற்றி  கூறுகிறார் சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.முரளி.
" காலணி  வடிவமைப்பு மற்றும் உற்பத்தி டிப்ளமோ படிப்புக்கு இந்தியாவில் குறைந்த அளவில்தான் கல்லூரிகள் உள்ளன. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நேரடியாக நடத்தும் மத்திய காலணி பயிற்சி நிறுவனம் ( Central Footwear Training Institute) , இந்தியாவில் சென்னை மற்றும் ஆக்ராவில் மட்டுமே உள்ளது.
தகுதி:
இரண்டு வருட காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி படிப்புகளுக்கு ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சிறிய காலப் படிப்புகளுக்கு, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதுமானது.
இந்தப் படிப்புகளில் 90 சதவிகிதம் ப்ராக்டிக்கல் படிப்புதான் இருக்கும். டிசைனிங் துறையில் விருப்பம் உள்ளவர்கள் இதில் பெரிய அளவில் சாதிக்கலாம். பெரும்பாலும் பெண்களே இந்தப் படிப்புகளில் விரும்பி சேருகிறார்கள். இதுவரை பயிற்சி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் பெண்கள்தான்.
இதில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. 18 மாத வகுப்பான  Footwear Technology &Management படிப்பையும் படிக்கலாம். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்போருக்கு இது சிறந்த வழி.
வேலைவாய்ப்புகள்:
உலக தோல் ஏற்றுமதியில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இதனால் தோல் உற்பத்தி நிறுவனங்களில் நிறைய வேலைவாய்ப்புகளைப் பெறலாம். உலக அரங்கிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தோல் மற்றும் ரப்பர் தொடர்பான ஆராய்சி நிறுவனங்கள், காலணி டிசைனர், ஷூ டிசைனர் என வேலைவாய்ப்புகள் எக்கச்சக்கம் உள்ளன.
காலணிகளை வீட்டில் இருந்தபடியே வடிவமைத்து பிரபல நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம், நாம் வடிவமைக்கும் காலணிகளின் வடிவம் மற்றும் தரத்தை பொறுத்து நம் உற்பத்திக்கான வருமானம் கிடைக்கும். தொழில் தொடர்பான திறமையும்,  புதுவிதமான சிந்தனையும் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 50,000 முதல் 70,000 ரூபாய் வரை  சம்பாதிக்கலாம்.
வட இந்தியாவில் இருந்துதான் அதிக மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். தென் இந்தியாவில் காலணி படிப்பு குறித்து சென்டிமென்ட் பார்ப்பதால், மிகக் குறைந்த அளவிலேயே தென் மாநில மாணவர்கள் சேருகிறார்கள்." என தெரிவித்தார். 


உணவுப் பதப்படுத்துதல் (பொறியியல் பட்டப் படிப்பு )
பொறியியல் படிப்பு என்றாலே மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் மட்டுமே உள்ளன என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அவற்றைத் தாண்டிய பல பொறியியல் பட்டப் படிப்புகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க துறைதான் உணவு பதப்படுத்தும் துறை சார்ந்த படிப்புகள். 'தமிழ்நாட்டின் நெற்க்களஞ்சியம்' என அழைக்கப்படும் தஞ்சாவூரில் அமைந்துள்ளது, இந்திய பயிர் பதப்படுத்தும் தொழில் நுட்ப நிறுவனம். மத்திய உணவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இது, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுகிறது.
உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறையை மேம்படுத்த  இந்தத் துறை சார்ந்த பி.டெக், எம்.டெக் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன. உணவு பதப்படுத்துவதில் உள்ள புதிய முறைகள், உணவைப் பதப்படுத்துவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என ஆராய்ச்சிப் படிப்புகளும் (Ph.D) படிக்கலாம்.
தகுதி:
நான்கு வருட பி.டெக் பட்டப் படிப்புக்கு, பன்னிரெண்டாம் வகுப்பில் பொறியியல் பட்டப் படிப்புக்கான மதிப்பெண்களுடன் ஜே.இ.இ ( JEE - Joint Entrance Examination ) என அழைக்கப்படும் நுழைவுத் தேர்விலும் 60 சதவிகித மதிப்பெண்கள் வேண்டும்.  ப்ளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
எம்.டெக் எனப்படும் இரண்டு ஆண்டு முதுகலை படிப்புக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு:
உணவு பதப்படுத்தும் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. உணவு சார்ந்த தொழிற்சாலைகளிலும் அதைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலும் உணவு தர கண்காணிப்பாளர், பதப்படுத்துவதில் புதிய முறைகள் என ஆராய்ச்சிகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
இந்திய அளவில் வெறும் மூன்று சதவிகித உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள் வீணாவதாக இந்திய பயிர் பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Crop Processing Technology) ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் பால் உற்பத்தி ( Highest Milk Production, Livestock in the world), கால்நடைகள் உற்பத்தியில் முதலிடம், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் (fruits and vegetables second largest) இரண்டாம் இடம், உணவு தானியங்கள் (food grains) மற்றும் மீன்கள் (Fishes) உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் (third largest) இந்தியா உள்ளது.
ஆனால் உணவு பதப்படுத்தும் தொழிலில் நம் நாடு இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.44,000 கோடி அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதாகவும், நாட்டில், தினக்கூலி பெற்றுத்தரும் தொழில் என்ற அளவில் உணவுத்தொழில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்தத் தொழில் பிரமாண்டமான வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளன.
நமது மாநிலத்திலேயே இப்படி ஒரு படிப்பு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive