Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேவையில்லாத சர்ச்சை!

                மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று 1994-ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தும், கல்வித்துறை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
                            இது ஏதோ வேண்டுமென்றே செய்யப்பட்ட புறக்கணிப்பு அல்ல. மேனிலைப் பள்ளிகள் என்பது ஜூனியர் கல்லூரி என்ற அளவில் பார்க்கப்படாமல், அவை பள்ளிகளாகவே பார்க்கப்பட்டன. அடுத்ததாக, ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களில் பெரும்பாலோர் அதே பள்ளியில் தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 பயில விரும்புவதும் இன்னொரு காரணம்.
                புகுமுக வகுப்பு (பி.யு.சி.) நடைமுறையில் இருந்தபோது, பல கிராமத்து மாணவர்கள் நகர்ப்புற கல்லூரிகளுக்கு வந்து பயில்வதில் உள்ள இடையூறுகளாலும் வறுமை காரணமாகவும் உயர் கல்வியைத் தவிர்த்தனர். கல்லூரிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவேதான் அவர்கள் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அதே ஊரில் அதே பள்ளி வளாகத்திலேயே புகுமுக வகுப்பிலும் படிக்கும் விதமாக, அன்றைய பள்ளி இறுதித் தேர்வு (11-ஆம் வகுப்பு) மற்றும் புகுமுக வகுப்பு இரண்டையும் ஒன்றாக இணைத்து, பிளஸ்-2 என்று மாற்றியமைக்கப்பட்டது.
                   தற்போது 10-ஆம் வகுப்புவரை பள்ளி அளவில் இடஒதுக்கீடு நடைமுறை கிடையாது. அரசின் நோக்கமே, அருகமை பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து, அதிக அலைச்சல் இல்லாமல் கல்வி பயில வேண்டும் என்பதுதான். தனியார் பள்ளிகள் தோன்ற அடிப்படைக் காரணமும் இதுதான். ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தங்கள் பொருளாதார வசதி, பள்ளியின் தொலைவு ஆகியவற்றை மனதில் கொண்டு பள்ளிகளைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.
               இதில் இடஒதுக்கீடு குறித்து யாரும் கவலைப்படுவதே இல்லை. மேனிலைப் பள்ளியும் அதே பள்ளி வளாகத்தில், அதே கல்வித் துறையின் கீழ் அமைவதால், ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் (குரூப்) இடஒதுக்கீட்டு முறைப்படி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%, பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, பொதுப் பிரிவினருக்கு 31% என்று வகைப்படுத்துவது குறித்து யாரும் கவலைப்படவில்லை.
                  ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பில் இடஒதுக்கீடு முறை இல்லாமல் இருக்க, பிளஸ் 1-இல் மட்டும் இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும் என்றால் அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிகோலும். இடஒதுக்கீடு விகிதாசாரத்தின்படி மாணவர்களைப் பிரித்து நிரப்புதல் பெரும்பாலான பள்ளிகளில் சாத்தியமில்லை. அதே பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிகளைத் தேடுகின்ற நிலைமை உருவாகும். வெளியூர் சென்று பயில இயலாமல் 10-ஆம் வகுப்புடன் கல்வியை முடித்துக்கொள்ளும் அவலமும் ஏற்படலாம். இதனால், மீண்டும் பழைய சிக்கல் உருவாகுமே தவிர, பயனொன்றும் ஏற்பட்டுவிடாது. ஆகவேதான், இந்த அரசாணைக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. மேலும், இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை என்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ இதுவரை எந்தவிதமான புகாரும் இல்லை.
 இருப்பினும், ஒடிஸா மாநிலத்தில் உள்ளதைப் போன்று, பிளஸ் 2-வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றமோ அல்லது சமூகநீதிப் போராளிகளோ வலியுறுத்தினால், அப்போது பிளஸ் 2 மாணவர் சேர்க்கை நடைமுறையை முற்றிலுமாக மாற்றி அமைத்தாக வேண்டும். அதாவது, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாகக் கலந்தாய்வு நடத்தப்பட்டாக வேண்டும்.
 தற்போது பொறியியல் கல்விக்கு எவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்துகிறதோ அதேபோன்று, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இந்தக் கலந்தாய்வை நடத்த வேண்டியிருக்கும். இந்தக் கலந்தாய்வைத் தமிழகம் முழுமைக்குமாக நடத்தினால், முதலில் தனியார் பள்ளிகளில் வெளியூர் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் காரணமாக சேர்ந்துவிடுவார்கள். உள்ளூர் மாணவர்களுக்கு இடம் இல்லாமல் போகும். கல்வி மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், குறைந்தபட்சம் அதே பள்ளியில் இடம் இல்லாவிட்டாலும், அதே ஊரில் அருகமை பள்ளிகளில் சேர்வதற்கான வாய்ப்பாவது ஏற்படும்.
 கலந்தாய்வு என்று வந்துவிட்டால், தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளியில் உள்ள இடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை அரசு நிரப்புவதற்கு ஒப்படைக்க வேண்டும். மீதியுள்ளவற்றை அவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறு சேர்க்கைக்கான இடங்களை அரசின் கலந்தாய்வுக்கு விட்டுக்கொடுக்க தனியார் கல்வி நிறுவனங்கள் முன்வருமா? பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் நிலையில், கல்லூரிக்கே உரித்தான இடஒதுக்கீடு, கலந்தாய்வு, இடங்களை அரசுக்கு ஒப்படைத்தல் ஆகியன சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தின் படியேறுவார்கள்.
 தற்போதைக்கு ஓர் எளிய தீர்வு, அந்தந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை அதே பள்ளியில் தொடர்ந்து பிளஸ் 2 படிப்பதை உறுதி செய்தாலே போதும், அதுவே கல்வித் துறை சமூக நீதிக்குச் செய்த தொண்டாக இருக்கும். அத்துடன், தாங்கள் உரிய மதிப்பெண் பெற்றும் ஒரு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கவும், அந்த புகாரின்பேரில் மூன்று நாளைக்குள் முடிவு எடுக்கவுமான ஒரு குழுவை, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் நியமித்தாலும் பயன்தரும்.
 இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது பள்ளி அளவில் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சையை எழுப்புவது பழைய பிரச்னையை வரவழைப்பதாகத்தான் அமையும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive