Home »
» பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை கோரி வழக்கு.
மதுரை, வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று
உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை
விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் அரசு தேர்வுத்துறை இயக்குனர்
பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கருணை மதிப்பெண்நெல்லை புது
நேருநகரைச் சேர்ந்தவர் சாமுவேல்ஆசீர்ராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில்
தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-என் மகன் ரிச்சர்ட் சாமுவேல்,
பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளான். கடந்த மார்ச் மாதம் வேதியியல் தேர்வு
நடந்தது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியான 18-வது கேள்வி, 10
மதிப்பெண் கேள்வியான 70-வது கேள்வியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ கேள்வியில்
(‘ஏ’ மற்றும் ‘பி’ கேள்விக்கு தலா 5 மதிப்பெண்) ‘பி’ கேள்வி ஆகியவற்றுக்கு
மாணவர்கள் எந்த விடை எழுதி இருந்தாலும் 6 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக
வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள 2 கேள்விகளுமே சரியான கேள்விகள்
தான். சுற்றறிக்கை‘தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்
மாணவர்களுக்கு இந்திய அளவில் நடக்கும் போட்டித்தேர்வு, ஐ.ஐ.டி.
நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறமை இல்லை. மனப்பாடம் செய்து
மட்டுமே அதிக மதிப்பெண் பெறும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். எனவே, ஒவ்வொரு
பாடத்தையும் மிக ஆழமாக புரிந்து கொண்டு வினாக்களுக்கு பதில் அளிக்கும்
வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்’ என்று கடந்த கல்வி ஆண்டின் போது அரசு
தேர்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த
சுற்றறிக்கை அடிப்படையிலேயே பிளஸ்-2 தேர்வுக்கான வினாக்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள கேள்விகளை
பொறுத்தமட்டில் பாடத்தை மிக ஆழமாக புரிந்து கொண்டு படித்த மாணவர்கள்
மிகச்சரியான பதிலை அளித்திருப்பார்கள். என் மகனை டாக்டராக உருவாக்க
வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக பேராசிரியரான நானும், விவசாய பட்டதாரியான
என் மனைவியும் பிளஸ்-2 பாடத்திட்டத்தை என் மகன் முழுமையாக புரிந்து
கொள்ளும் வகையில் சொல்லிக்கொடுத்தோம்.பாதிப்பை ஏற்படுத்தும்இதனால், என்
மகன் அந்த கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளான். என் மகனை போன்று
பாடத்தை முழுமையாக புரிந்து கொண்டு படித்த மாணவர்கள் பலர் அந்த
கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த
பதில் அளித்திருந்தாலும் கருணை மதிப்பெண்ணாக 6 மதிப்பெண் வழங்க வேண்டும்
என்று உத்தரவிட்டிருப்பது நன்றாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு
பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த 2 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்த
மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். கருணை மதிப்பெண்
வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு மீது உரிய உத்தரவு
பிறப்பிக்கும் வரை பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பதிலளிக்க உத்தரவுஇந்த மனு நீதிபதிகள்
டி.எஸ்.சிவஞானம், பி.என். பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு
வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மீனாட்சிசுந்தரமும், அரசு தரப்பில்
வக்கீல் ஆயிரம் செல்வக்குமாரும் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த
நீதிபதிகள், பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை.
இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், அரசு தேர்வுத்துறை
இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்
ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை அடுத்த
மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...