பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் மே 17, 18 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் மே 17, 18 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
கட்டண விவரம்: விடைத்தாளின் நகல் பெற விரும்பும் மாணவர்கள் மொழிப்பாடத்துக்கு ரூ.550, ஆங்கிலத்துக்கு ரூ.550, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழி, ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205 செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும். விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள்:கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வு குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...