அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிய பரபரப்பு பின்னுக்குப்போய்விடும் என்பதற்காக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகளை திட்டமிட்டு தள்ளிப்போக செய்ததாக ஆளும் அரசின் புகார் வாசிக்கிறார்கள் பெற்றொர்கள்.
இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது.தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 17-ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி முடிவுற்றபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே மாத மத்தியிலும் வெளியிடுவதே பள்ளிக்கல்வித்துறை இதுநாள் வரை பின்பற்றிவரும் நடைமுறை. அதற்கு மாறாக இப்போது தேர்வு முடிவுகள் தள்ளிப்போயிருப்பது பெற்றோர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தேதி தள்ளிப்போனதற்கு பின்னணியில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருப்பதாக புகார் வாசிக்கின்றனர் அவர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய ஒரு மாணவனின் தந்தை, “அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கிறார்கள். கல்வித்துறையும் அதில் விதிவிலக்கல்ல. 2014 மற்றும் 2015 ம் வருடங்களில் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் மே 9ந்தேதியும் பத்தாம் வகுப்பு முடிவுகளை மே 15 ந்தேதியும் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.ஆனால் இப்போது முறையே இந்த தேர்வு முடிவுகள் மே 17 மற்றும் 25 தேதிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுகவின் அரசியல் உள்நோக்கமே காரணம்.சட்டமன்றத் தேர்தல் தேதி மே 16 நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் முன்பெ தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆளும்கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்றுதான் வெளியிடப்பட்டது. மற்ற கட்சிகளின் அறிக்கைகளை விஞ்சும் அளவு இருப்பதற்காகவே அதிமுக இத்தனை நாள் அவகாசம் எடுத்துக்கொண்டது. அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் பல மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பையும் இப்போது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்பார்த்தபடி மே 7 ந்தேதிக்குள் முடிவுகள் வெளியானால் அதே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிக்கும் தேர்தல் அறிக்கையை பின்னுக்குத்தள்ளி தேர்வு முடிவுகளே பிரதானமாக தமிழகத்தில் பேசப்படும். ஊடகங்களின் கவனமும் சிதறிவிடும். தேர்தல் தேதி நெருங்கிவிட்ட நிலையில் இது வெற்றியை பாதிக்கும் என்ற அரசியல் கணக்கில்தான் அதிமுக அரசு திட்டமிட்டு தேர்வு முடிவுகளை தாமதித்துள்ளது. இதற்காக திட்டமிட்டு பள்ளிக்கல்வித்துறையிலிருந்து சென்ற கோப்பின் மீது முதல்வர் அலுவலகம் அக்கறை காட்டாமல் அறிவிப்பு தேதி தள்ளிப்போக காரணமாகிவிட்டது. அரசுதரப்பிலான தாமதம் என்பதால் இது பெருமளவு பாதிப்புஏற்படுத்தாது என்றாலும் கல்வித்துறையில் அரசியல்செய்யலாமா என்பதுதான் எங்கள் கேள்வி” என்றார் ஆதங்கத்துடன்.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு விஷயத்தில் இப்படி அரசியல் செய்வது ஆளும்கட்சிக்கு அழகா... இதனால் மாணவர்களின் அடுத்தகட்ட படிப்புகளுக்கான ஒவ்வொரு விஷயங்களும் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது. கவுன்சிலிங்,அதை தொடர்ந்து படிப்புகளை இறுதிசெய்வது, மறுமதிப்பீடு என அனைத்தும் தள்ளிப்போகும் என கவலைப்பட்டார் இன்னொரு மாணவனின் தந்தை.ஆனால் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனதற்கு முழுக்க முழுக்க கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என்கின்றனர் இன்னொரு தரப்பு.வழக்கமாக தேர்வு முடிவுகளை தேர்வுத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்ட சில நாட்களில் தேர்வுத்துறை அலுவலகம் இறுதி செய்து அதை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும். அவர்கள் அதை சரிபார்த்தபின் முதல்வர் அலுவலகத்திற்கு அறிவிப்பு தேதியை குறிப்பிட்டு அனுப்புவர். முதல்வர் அலுவலகத்தில் அந்நேர சவுகரியங்களை கணக்கிட்டு ஒப்புதல் செய்து அனுப்புவர். இதுதான் நடைமுறை.ஆனால் இந்த முறை பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முறையாக சரியான நேரத்திற்கு முதல்வர் அலுவலகத்திற்கு இந்த கோப்பை அனுப்பவில்லை. சில நாட்கள் தாமதத்தில் சென்றன. முதல்வர் அலுவலகத்தில் அது முறையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மெத்தனத்திற்கு அரசை குறை கூறுவது சரியல்ல” என்றார் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர்.“உண்மையில் இதில் அதிகாரிகள் இன்னொரு தவறையும் செய்திருக்கிறார்கள். வழக்கமான தேர்தல் நேரங்களில் நாங்கள் முன்கூட்டியே இதற்கான கோப்புகளை தயாரித்து மேலதிகாரிகளுக்கு அனுப்புவோம். அல்லது தேர்தலை மனதில்கொண்டு மேலதிகாரிகளே எங்களை விரைந்து முடிக்க அவசரப்படுத்துவர். அவர்களும் அதே அக்கறையுடன் அதைமுதல்வர் அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். தேர்தல் சர்ச்சையில் மாணவர்களுக்கு எந்த சங்கடங்களும் நேராமல் இருக்க அதிகாரிகள் இப்படி அக்கறையுடன் செயல்பட்ட காலம் ஒன்று உண்டு. பொதுத்தேர்தல் நடைபெறும் நேரமான இப்போது அதிகாரிகள் அதை பின்பற்றவில்லை. அதிகாரிகளின் மெத்தனமே இந்த தாமதத்திற்கு காரணம். தேவையின்றி அரசை குறை சொல்லக்கூடாது” என்றார் அவரே தெளிவாக.எது உண்மையோ இனி இப்படி நடக்காமல் இருந்தால் சரி...!
- எஸ்.கிருபாகரன்
நன்றி
விகடன்
விகடன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...