அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
அது, கடந்த ஆண்டு ஜூன், 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர், 1 முதல், 'துாய்மை பாரதம்' திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 'கிரிஷி கல்யாண்' எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும், 0.5சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூன், 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும்.சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், 'பார்'களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும்போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டு சேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.
சேவை வரி ஏன்?
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு,சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம்ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில், சேவை வரி, 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...