15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு
திண்டுக்கல் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி
தொடங்கி, 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப
மன்றத்தின் ஆலோசகரும், பாரத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பொன்னவைக்கோ
செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்
கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இதில்,
தன்னார்வத் தொண்டர்களின் பலரின் முயற்சியால் தமிழ்க் கணினி துறையை
வளர்க்கும் பணியில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
இதுவரையில் தமிழ் வழிக் கணினியை
மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த அமைப்பு சார்பில் 14 மாநாடுகள்
நடத்தப்பட்டுள்ளன. 15-ஆவது மாநாடு எங்கும் கணினி தமிழ், எதிலும் கணினி
தமிழ் என்ற தலைப்பில் செப். 9, 10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்திய
கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
இதில், தமிழும், அறிவார்ந்த பொருள்களுக்கான
இணையமும், அச்சு புகைப்பட, ஓலைச் சுவடிகளுக்கான எழுத்துணர்வி
தொழில்நுட்பம், மருத்துவத் துறைக்கான தமிழ் கணினி தொழில்நுட்பங்கள், கணினி
உதவியுடன் தமிழ் கற்றல், இயல்மொழி உருவாக்கம், செல்லிடப்பேசியில் தமிழ்
தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் மாநாடு நடைபெறுகிறது. இந்த
மாநாட்டில் ஆய்வுக் கருத்தரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகிய 3
பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் சர்வதேச நாடுகளில் இருந்து 250-க்கும்
மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கணினி தமிழ் பற்றிய ஆய்வுக்
கட்டுரைகளையும் சமர்பிக்கவும், 5 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்க உள்ளனர்
என்றார்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் நடராஜன், உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் இனியநேரு,
செயல் இயக்குநர் செல்வமுரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...