கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும்.
சில அடிப்படை உண்மைகளை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று இன்னாருக்கு இன்னார் என்று யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. இரண்டாவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்காக யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது உங்கள் அன்புக்கு நீங்கள்தான் அதிகாரி. எனவே நீங்கள் விரும்பும் வரை வழங்க முடியும். ஆனால் மற்றவர்களிடமிருந்து அன்பை நீங்கள் வற்புறுத்தி பெற முடியாது. ஏனெனில் மற்றவர் உங்கள் அடிமையல்ல.
இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சேர்ந்திருக்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுத் தர முடியும். ஒருவர் மற்றவரின் தனித்தன்மையில் ஒருபோதும் குறுக்கிடாதிருக்கமுடியும்.
உண்மையில் கல்யாணம் என்பது காலாவதியாகிப்போன ஒரு நிறுவனம். முதலாவதாக, எந்த நிறுவனத்தின் உள்ளேயும் வாழ்வது நல்லதல்ல. எந்த விதமான அமைப்பும் அறிவுபூர்வமானதே. கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் திருமணமானது ஏறக்குறைய அழித்து விட்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற காரணங்களுக்காக. எனவே முதல் விஷயமே, திருமணமே – திருமண சடங்கே கூட – போலித்தனமானதுதான்.
திருமணத்தை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். வினையாக எடுத்துக் கொண்டால் சுதந்திரம் சாத்தியமேயில்லை. திருமணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் – அது ஒரு விளையாட்டுத்தான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள். வாழ்க்கை மேடையில் நீங்கள் நடிக்கும் பாத்திரமே திருமண வாழ்க்கை. ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல. அதற்கு எந்த வித யதார்த்தமும் கிடையாது. அது ஒரு கட்டுக்கதை. ஆனால் கட்டுக்கதையையே யதார்த்தம் என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் மூடர்களாக இருக்கிறார்கள்.
கண்களில் கண்ணீருடன் கதை படிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். கதை நிகழ்ச்சிகள் அவ்வளவு சோகமாக போகிறதாம். திரைப்பட அரங்குகளில் விளக்குகளை அணைத்துவிடுவது மிக நல்ல உபாயம்தான். இதனால் எல்லோராலும் சிரித்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, படத்தை ரசிக்க முடிகிறது. வெளிச்சம் இருந்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று இருக்கும். அதே சமயம் திரை காலியாக உள்ளது. அதில் யாரும் இல்லை என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அது வெறுமனே ஒளிவீச்சால் தோற்றுவிக்கப்படும் படம்தான். ஆனால் அவர்கள் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். இதேதான் நம் கதையிலும் நடக்கிறது.
வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நாம் விவகாரமாக எடுத்துக் கொள்கிறோம். அவ்விதமான காரியநோக்கிலிருந்தே நம் பிரச்னை தொடங்குகிறது.
முதலில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒருவரை காதலியுங்கள். ஒருவருடன் வாழுங்கள். இது உங்களின் அடிப்படை உரிமைகளில் அடங்கும். நீங்கள் ஒருவருடன் வாழவும் முடியும் ஒருவரை காதலிக்கவும் முடியும்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல. இங்கேதான் இது சூழ்ச்சிக்கார புரோகிதர்களால் சாமியார்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சமுதாயத்துடனான விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பினால், அதேசமயம் தனிப்பட்டு நிற்க விரும்பினால், உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ இந்த திருமணம் வெறும் விளையாட்டுத்தான் என்பதை தெளிவாக்கி விடுங்கள்.
ஒருபோதும் இதை பிரச்னைக்குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்திற்கு முன்பு இருந்தமாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என் வாழ்வில் நீயும் குறுக்கிடாதே. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம் சந்தோஷத்தை, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மற்றவருக்கு பாரமாக மாற மாட்டோம்.
எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்து விட்டதாக, தேனிலவு தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே மேற்கொண்டு நடிக்கத் தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக இருப்போம். “நாம் நிரம்ப காதலித்தோம், என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருப்போம், நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும் நம்மைத் தொடர்ந்து வரும்.
ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது அன்பின் அடையாளமாக இருக்காது. நான் உன்னை காதலிப்பது உண்மையென்றால் என் காதல் உனக்கு துன்பமாக மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கி விடுவேன்.
நீ என்னை உண்மையாக காதலித்தால் உன் காதல் எனக்கு சிறையாக மாறுகிறது என்பதை காணும் அக்கணமே நீ என்னை விட்டு நீங்கி விடுவாய்.”
அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும். மூடச்சடங்குகளாக அதை தாழ்த்தி விடக்கூடாது. அன்பும் சுதந்திரமும் ஒன்றிணைந்தே செல்லும் – ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றதை விட்டுவிட முடியாது. சுதந்திரத்தை அறிகிற மனிதர் அன்பு நிறைந்தவராய் இருப்பார். அன்பை அறிகிற மனிதர் எப்போதுமே சுதந்திரம் தர சித்தமாய் இருப்பார்.
நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் தருவீர்கள் சுதந்திரம் தருவது என்பது பூரணமாய் நம்புவதே தவிர வேறல்ல. சுதந்திரம் என்பது அன்பின் வெளிப்பாடு.
எனவே திருமணம் ஆனவராயினும் ஆகாதவராயினும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா திருமணங்களுமே போலியானவைதான். சம்பிரதாய வசதிக்காகத்தான். உங்களை சிறைப்படுத்தி ஒருவருடன் ஒருவரை பிணைத்துப் போடுவதல்ல அவற்றின் நோக்கம்.
இருவரும் சேர்ந்து வளர்வதற்கு உதவுவதே அவற்றின் நோக்கம். ஆனால் வளர்ச்சிக்கு சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் கடந்த காலத்தின் எல்லா கலாசாரங்களுமே, சுதந்திரம் இல்லையென்றால் அன்பு மரணமடைகிறது என்பதை மறந்து விட்டன.
---
அன்புடன்-து.ராமராஜ்
மாவட்ட பொருளாளர்
த.தொ.ப.ஆ.கூட்டணி
நாமக்கல்
அத்தியாவசியம் - ஆடம்பரம்
ReplyDeleteதனிமனித வாழ்க்கை - பொதுவாழ்க்கை
கெளரவம் - வரட்டுக்கெளரவம்
இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை தவறாக புரிந்துகொண்டு வாழ்பவர்களால்தான் மனித வாழ்க்கை என்பது சடங்காகி விட்டது.
மனித சாதியில் இந்த துயரங்கள் யாவும்
அவன் மனதினால் வந்த நோய்.
என்றாலும் வாழ்வியல் குறித்த தங்களின் பார்வைக்கு ஒரு பாராட்டுகள்.
நன்றி