ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
சோ.முருகேசன், மு.மணிமேகலை, மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ், தலைவர்
பி.ராஜ்குமார், பொருளாளர் சே.சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர்
மு.முத்தானந்தம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்
கூறிஇருப்பதாவது:-
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான
பொதுமாறுதல் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் கோடை
விடுமுறையில் நடைபெறும். கலந்தாய்வில் பங்குபெற விரும்பும் ஆசிரியர்களிடம்
இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் அனைத்து
வட்டாரங்களிலும் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தால் பெறப்பட்டு பதிவேடு
ஏ, பி, சி, என பிரிக்கப்பட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு
அனுப்பப்படும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம்
வாரியாக பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின்
முன்னுரிமைப் பட்டியலும், மே மாத இறுதியில் ஏற்படும் காலிப் பணியிட
விவரமும் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு தாமதம்
ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலிப் பணியிடங்களை, பணியிட மூப்பின்
அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக் கொள்வர். மாறுதல்
பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில், அதாவது ஜூன் மாதம்
பள்ளி திறக்கும் முதல் வேலைநாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளிக்கூடங்களில்
புதிதாக பணியேற்று கொள்வார்கள். இதனால், மாணவர்களின் கல்விநலன்
பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது. ஆசிரியர்களும் தங்களுடைய குடும்பத்தினரை
எளிதாக புதிய இடத்திற்கு இடம் பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு சரியான திட்டமிடல் இல்லாததால், பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு
செப்டம்பர் மாதம், மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை
மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு எவ்வித அறிவிப்பையும் கல்வித்துறை
வெளியிடவில்லை.
சட்டசபை தேர்தலை காரணம் காட்டாமல் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று
ஆசிரியர்களிடம் இருந்து பொதுமாறுதல் விண்ணப்பங்களை பெற நடவடிக்கை எடுக்க
வேண்டும். மே மாத இறுதியை அடிப்படையாக கொண்டு முழு காலி பணியிட
விவரங்களையும் அறிவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலி பணியிடங்களின்
விவரங்கள் கலந்தாய்வுக்கு முன்னதாக ஒளிவு மறைவு இல்லாமல் இணையதளத்தில்
வெளியிட வேண்டும். எனவே கோடை விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை
உடனே நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...