'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை
தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ், 50
ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள், மத்திய அரசின்,
என்.சி.இ.ஆர்.டி., வகுத்த பாடத் திட்டத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வேறு பாடத் திட்டங்களை பயன்படுத்தினால், பள்ளியின் இணைப்பு அங்கீகாரம்
ரத்து செய்யப்படும்.
ஆனால், பல பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை தவிர, தனியார் புத்தக
நிறுவனங்களின் புத்தகங்களையும் கூடுதலாக வாங்கி, அவற்றின் அடிப்படையிலும்
பாடங்கள் நடத்துகின்றன. அதனால், மாணவர்கள் பல வகையில் குழப்பங்களுக்கு
ஆளாகின்றனர்.
தனியார் புத்தகங்களை, அதிக பணம் கொடுத்து வாங்க முடியாமல் பெற்றோர்
அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு புகார்கள்
வந்ததை அடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., அகாடமிக் பிரிவு
கூடுதல் இயக்குனர் சுகந்த் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பல பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., அல்லாத
தனியார் புத்தகங்களை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்துவதாக புகார்
வந்துள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் பாடத் திட்டம் குறித்து சரியான
தெளிவின்றி அவதிப்படுகின்றனர். எனவே, எந்த பள்ளியும் தேவையற்ற புத்தகங்களை
வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறும்போது,
'பாடத் திட்டத்தில் குளறுபடி, புத்தக பிரச்னை குறித்த புகார்களை,
directoracad.cbse@nic.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்' என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...