இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு பருவத் தேர்வுகளில் ஓரிரு தாள்களுக்கு ஆன்-லைன் கொள்குறி தேர்வு முறையை அறிமுகம் செய்ய
சென்னைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறினார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி திருமகன் பேசியது:
பல்கலைக்கழகத்தின் இப்போதைய தேர்வு முறையால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கும், மதிப்பெண் மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ.750 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு பருவத் தேர்வுகளில் ஒரு சில தாள்களுக்கு ஆன்-லைன் கொள்குறி தேர்வு முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது அறிவுப்பூர்வமான தேர்வு முறையாகும். நன்கு படித்தால் மட்டுமே இந்தத் தேர்வு முறையில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்.
மேலும், மாணவர் தேர்வு எழுதி முடித்து "எண்ட்' பொத்தானைத் தட்டிய உடனேயே, அவர் எத்தனை மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை கணினி காட்டிவிடும். இதனால், தேர்வு முடிவுக்காக நீண்ட நாள்கள் காத்திருக்கத் தேவையில்லை.
இளநிலை பட்டப் படிப்பில் 2 தாள்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் 3 தாள்களுக்கும் இந்த ஆன்-லைன் தேர்வு முறையை அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறோம். மற்ற தாள்கள் அனைத்தும் வழக்கம்போல் எழுத்துத் தேர்வு முறையிலேயே நடத்தப்படும்.
ஆட்சிமன்றக் குழு, பேரவைக் குழு ஒப்புதலுக்குப் பின்னர், இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கர்நாடக மாநிலத்திலுள்ள மணிப்பால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஒருசில பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே இந்த நடைமுறை அமலில் உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் வருகிற 2017-18 கல்வியாண்டு முதல் இந்தப் புதிய நடைமுறையை அமலுக்குக் கொண்டு வரும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...