எந்த விஷயம் பற்றி ஆதரித்து எழுதுவதாக
இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும், இரண்டு நிலைகளில் இருந்தே
ஜெயமோகன் அணுகுவார். உச்சபட்ச ஆராதனை அல்லது உச்சபட்ச வசைபாடுதல். இதை
தமிழக இலக்கியவாதிகளும், வாசகர்களும், பத்திரிகைகளும் நன்கு அறிவர். இதில்
அவருக்கு நன்மையும் உண்டு. எப்பொழுதுமே இவர் இப்படித்தானே, இவருக்கு பதில்
சொல்லி ஆகப்போவதில்லை என்று நிறைய நேரம், அவர் எழுத்தைக் கடந்து
போய்விடுவார்கள். எல்லா நேரமும் கடந்துபோக முடியாதல்லவா!
இந்திய தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்களை
நம்பியே தேர்தலை நடத்துகிறது. அதற்கு முக்கியமான காரணம் நம்பகத் தன்மைதான்.
அரசு ஊழியர்களை மட்டுமே அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும்; அவர்களிடம்
விளக்கங்கள் கோர முடியும்; தவறு நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
முடியும். அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளை தங்களின் அடிப்படை கடமையாக
நினைத்தே செயல்படுகின்றனர்.
காவலிலே கழியும் நாட்கள்:சொல்லப்போனால்,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என்ற நிலையிலேயே, அரசு ஊழியர்களின்
வயிற்றில் புளி கரைய ஆரம்பித்துவிடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்,
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு அலுவலருக்கும், நித்ய கண்டம்
பூரண ஆயுசுதான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வரும் நடத்தை விதிகளால்,
பாதிப்புக்கு உள்ளாவோர் அரசு ஊழியர்களே. மூன்றாண்டுகளுக்கு மேல் பணியில்
உள்ளோருக்குக் கட்டாய இடமாற்றம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து
காவல் துறையைப் போல், 24 மணிநேர பணி என, தேர்தலை முன்னெடுத்து நடத்தும்
வருவாய் துறையினர், பைத்தியம் பிடிக்காத நிலையில் தான், வேலை பார்த்துக்
கொண்டிருப்பர்.
தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களை நியமிப்பது, தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும்,
நடத்தை விதிகளையும் அமல்படுத்துதல், அரசியல்வாதிகள் வலிந்து இழுக்கும்
சண்டை சச்சரவுகளுக்கு ஈடுகொடுத்து அமைதியாக தேர்தல் நடைமுறைகளை
செயல்படுத்துதல் என, தேர்தலில் ஈடுபடும் ஒவ்வொரு அரசு ஊழியரும், எவ்வளவு
அவதிக்கு ஆளாகின்றனர் என்பதை, ஜெயமோகன் வாக்களிக்கச் செல்லும் நேரத்தில்
கூட
பார்த்திருக்க மாட்டார் போலும்.
தேர்தல் ஆணையம், இரண்டு, மூன்று சட்டசபைத்
தொகுதிகள் கடந்து, வேறொரு சட்டசபைத் தொகுதியில் தான் ஆசிரியர்களை தேர்தல்
அலுவலர்களாக நியமிக்கின்றனர். இம்முறை பெண்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட
இருப்பதாக, தேர்தல் ஆணையம்
சொல்லியிருக்கிறது.
குறைந்தது, 100 கி.மீ., தள்ளி உள்ள மையங்களுக்கே, ஆசிரியர்கள் தேர்தல் பணி செய்ய செல்கின்றனர். இன்று ஆசிரியர்களில், 70 சதவீதம் பேர்
பெண்கள் தான்.
வாக்களிப்பு நடத்தும் பணிக்காக மட்டும்,
ஏறக்குறைய மூன்று நாட்களை ஊழியர்கள் செலவழிக்க வேண்டும். தேர்தலுக்கு முதல்
நாள், பணியமர்த்தப்பட்ட ஊருக்குச் சென்று, காலையிலேயே தேர்தல் மையத்தில்,
வாக்குப் பெட்டியின் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.
அன்று முழுக்க ஒருநாள் பெட்டிக்குக் காவல்.
அடுத்த நாள் வாக்குப் பதிவு. வாக்குப் பதிவு முடிந்து, பெட்டியை வருவாய்
துறையினர் வந்து பெற்றுக் கொள்ளும் வரை அதற்கு காவல் பணி. நள்ளிரவுக்குப்
பின், குக்கிராமங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாது.
மூன்றாம் நாள் காலையில் கிளம்பி, தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப
வேண்டும்.
தேர்தலுக்கு முதல் நாளும், தேர்தல் அன்றும்
நள்ளிரவில் தமிழகம் முழுக்க உள்ள பேருந்து நிலையங்களில் சென்று பார்த்தால்
தெரியும்... கைக்குழந்தைகளுடனும், கணவன்மார்களுடனும், தனியாகவும் அல்லாடிக்
கொண்டு நின்றிருக்கும் அரசு பெண் ஊழியர்களை.
தேர்தல் நடக்கும் மையங்கள் எல்லாமே அரசு பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் என்ன வசதிகள் இருக்கின்றன என்பது, நாம் அனைவரும் அறிந்ததே.
கழிப்பறை வசதிகள் சமீபத்தில் இருக்கின்றன
என்றாலும், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைக்குத் தண்ணீர் வசதி இருக்காது.
குளிப்பதற்கான இடம் இல்லவே இல்லை. ஆடை மாற்றக்கூட தனியான அறைகள் எதுவும்
இல்லாத பள்ளிகளில், உட்காரும் பெஞ்சுகளில் இரவு முழுக்க கொசுக்கடியில்
படுத்து எழுந்து அல்லது இரவு முழுக்க துாக்கமே இல்லாமல் உட்கார்ந்திருந்து
விட்டு இரவைக் கழிப்பர். பல ஊர்களில் டீக்கடை கூட இருக்காது. அப்புறம்
ஓட்டலைப் பற்றி என்ன சொல்வது? யார் வீட்டிலும் ஒருவேளை சாப்பிட்டு விட
முடியாது. கட்சிக்காரனுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார் வந்துவிடும்.
தேர்தல் ஆணையம் கொடுக்கும், ஆயிரத்து சொச்சம் ரூபாய்க்காகவா, அரசு
ஊழியர்கள் இத்தனை பாடுகளையும் தாங்கிக் கொள்கின்றனர்?
சாத்தியமில்லைதேர்தல் முறைகளை மறைமுகமாகக்
கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டோர் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள்
என்கிறார் ஜெயமோகன். அதற்கு உதாரணமாக அவரிடம் ஓர் ஆசிரியர் பகிர்ந்து கொண்ட
உண்மைகளையும் கூறியிருக்கிறார். தாங்கள் நினைத்தால் ஓர் ஆட்சியையே மக்கள்
விரும்பினாலும் வரவிடாமல் செய்துவிட முடியும் என்றாராம். அவர் தேர்தல்
பணிக்கே போகாத
ஆசிரியராக இருப்பார் என்று
நினைக்கிறேன்.
ஏழு கோடி மக்கள்தொகை உள்ள தமிழகம் போன்ற ஒரு
மாநிலத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஒருமித்த கருத்துடன் ஒரு அரசை
மாற்றவோ அல்லது கொண்டு வரவோ நினைத்தால், நிச்சயம் அது சாத்தியமான ஒன்றே.
பதினைந்து லட்சம் ஊழியருக்கும்,
குடும்பத்திற்கு நான்கு பேர் என்று வைத்தால்கூட, 60 லட்சம் பேர் அரசு
ஊழியர்கள் குடும்பத்தைச் சார்ந்தோராக இருப்பர். அடுத்து, அவரின் உறவினர்கள்
எல்லாம் சேர்த்தால் கோடியை தாண்டும். பெரும்பான்மை வாக்காளர்களும் இதில்
இருப்பர் என்பதைச் சொல்ல
வேண்டியதில்லை.
ஒருமித்த கருத்துப் பிரசாரத்தின் வழியாக,
அரசு ஊழியர்களால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியுமே தவிர, கீழ்த்தனமாக
கள்ள ஓட்டுகளின் வழியாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வர, அரசு ஊழியர்கள்
நினைப்பதில்லை.
அப்படி நினைப்பார்களேயானால், தமிழகத்தில் எல்லோருக்கும் இருக்கும் புரிதலின்படி ஒரே ஆட்சி தானே
இருந்திருக்க முடியும்? எல்லா தேர்தல் பணியிலும், இதே அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் தானே
ஈடுபடுத்தப்படுகின்றனர்? அவர்களுக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்றால்,
ஏன் மாதச் சம்பளத்திற்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கப் போகின்றனர்? வேலையை
விட்டு அரசியல்வாதியாகி விடலாமே?
தேர்தல் நடைபெறும் மையத்தில், கண்ணை
கட்டிவிட்டா அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகள் உட்கார்ந்திருக்கின்றனர்?
ஏதேனும் ஒரு தேர்தல் அலுவலர், ஒரு வார்த்தை முன்பின்னாக சொல்லிவிட்டால் கூட
போதும், கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அரைமணி நேரத்துக்கு வாக்குப்பதிவை
நிறுத்தி விடுவர்.
மை வைப்பதில் துவங்கி, பேருந்து போகாத ஊர்களுக்குக் கூட வாக்குப் பெட்டிகளை சுமந்து சென்று, அரசு
ஊழியர்களே தேர்தலை நடத்திக்
கொடுக்கின்றனர்.
பொறுத்துக் கொள்ள முடியாது
அரசு ஊழியர்கள் எல்லாம் நியாயமானோரா;
அவர்கள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காக
தங்களின் வேலையைச் செய்கின்றனரா என்பது போன்ற பிரச்னைகள் எல்லாம், நிச்சயம்
விவாதிக்கப்பட வேண்டியவை.
அரசு ஊழியர்களின் பணி நேர்மைக்கும்,
சேவைக்கும் வக்காலத்து வாங்கி, நான் இந்த மறுப்பை எழுதவில்லை. ஆனால்,
தேர்தல் களத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் தான்,
இந்தியாவின் ஜனநாயகத்தை அமல்படுத்தும் தேர்தல் பணி நடைபெறுகிறது என்பதை
விளக்கவே இந்த மறுப்பு.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கும், கட்சி அரசியலுக்கும் உள்ள உறவுகள், வேறு தளத்தில் விரிவாகப் பேசப்பட வேண்டியவை. அரசு
ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, வேறு வழி ஏதாவது இருந்தால் ஜெயமோகன் பரிந்துரைக்கலாம்.
சாமானியர்களில் இருந்து
எழுத்தாளர்கள் வரை, மக்களின் வரிப்
பணத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்கள் என்று சொல்வதை எப்படி பொறுத்துக்
கொள்வது?
அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசே, மக்களுக்குச் சாதகமான அரசாக இருக்க முடியும் என்ற ஜெயமோகனின் வரிகள் வெறுப்பின் உச்சம்.
நான் முன்பே ஒரு கணக்கை சொல்லியுள்ளது போல்,
தமிழகத்தில் ஒரு கோடி மக்களுக்கு எதிரான ஓர் அரசாங்கத்தை, மக்கள் நல அரசு
எப்படி என்று சொல்வீர்கள்? அரசு ஊழியர்களை அரசின்
குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லையா ஜெயமோகன்?
கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: vandhainila@gmail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...