ஓட்டளிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,''
என, திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, முதல்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கான பயிற்சி கூட்டம், கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் ஜெயந்தி, ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ் ஆகியோர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பொறுப்பில், ஓட்டுச்சாவடி இயங்குவது குறித்து விளக்கினர். வடக்கு தொகுதிக்கு, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கையேடு, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
கலெக்டர் பேசியதாவது:பல தேர்தல்களில் பணியாற்றி உள்ளோம் என, யாரும் சாதாரணமாக இருந்து விடக்கூடாது. இத்தேர்தலில் அறிவித்துள்ள புதிய விதிமுறை குறித்து, நன்கு பயிற்சி பெற வேண்டும். ஓட்டுச்சாவடிகளுக்கு<, தலைமை அலுவலர்களே பொறுப்பு. ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி விதிமுறையை செயல்படுத்துவதில், பாரபட்சம் கூடாது; நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஓட்டுப்பதிவு நாளில், கட்சி ஏஜன்டுகள் கரை வேட்டி கட்டியிருக்கலாம். ஆனால், தொப்பி அணிவது, தலைவர் போட்டோ, சின்னம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க, சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தையுடன் வரும் பெண்கள், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, ஓட்டுப்பதிவு செய்ய, முன்னுரிமை வழங்க வேண்டும். திருப்பூர் வடக்கு நீங்கலாக, மற்ற தொகுதிகளில் தலா, நான்கு ஓட்டுச்சாவடி அலுவலர் பணியாற்ற உள்ளனர். "விவி பேட்' பயன்படுத்துவதால், திருப்பூர் வடக்கில் மட்டும், ஐந்து அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மே, 15ல், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். மண்டல அலுவலர் ஒப்படைக்கும் தேர்தல் பொருட்களை சரிபார்த்து, பெற வேண்டும். ஓட்டுச் சாவடியை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு, கட்சி சார்ந்த சின்னம், கொடி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளர்கள், 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால், "பூத்' அமைத்திருக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடியாக செயல்படும் பள்ளி வளாகத்தில், பிரதமர், முதல்வர் உட்பட முக்கிய தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது. ஓட்டுப்பதிவு, காலை, 7:00க்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடக்கும். மாலை, 6:00 மணிக்கு, வரிசையில் காத்திருப்பவருக்கு "டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஆண், பெண் ஓட்டுப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கடமை, பொறுப்பு
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயிற்சி முகாம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது; தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன், துவக்கி வைத்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்செல்வன், திருமுருகன், உதவி கமிஷனர்கள் செல்வநாயகம், கண்ணன் உள்ளிட்டோர், பயிற்சி அளித்தனர்.ஓட்டுச்சாவடி அலுவலருக்கான கடமை, பொறுப்பு மற்றும் தேர்தல் பணி குறித்து விளக்கப்பட்டது. அடுத்தகட்ட பயிற்சியில், ஒவ்வொரு அலுவலரும் பணியாற்ற உள்ள தொகுதி குறித்த தகவல் தெரிவிக்கப்படும். இறுதி பயிற்சியில், பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி விவரம் தெரிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...