பள்ளிக்கூட
பஸ்கள் தொடர்பான அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள
சிக்கல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகளுக்கு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுமி சாவு
சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 2012-ம் ஆண்டு படித்து வந்த 7 வயது சிறுமி ஸ்ருதி பள்ளிக்கூட பஸ் ஓட்டையில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது. அதில் சிலவற்றை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம், சில பள்ளிகளின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
பாதுகாப்பாக இருக்காது
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முழு பெஞ்சில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் சார்பில், பள்ளிக்கூட பஸ்களில் படிக்கட்டு மிகவும் தாழ்வாக இருக்கவேண்டும் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி தாழ்வான படிக்கட்டுகள் அமைத்தால், வேகத்தடையிலும், பெரிய பள்ளங்களிலும் அந்த படிக்கட்டுகள் இடிக்கும் என்று கூறப்பட்டது.
பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல்களில் 2 இரும்பு கம்பிகளை வைக்கவேண்டும், அவசரகால வழியை பஸ்சின் பின்பறம் வைக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் பாதுகாப்பானதாக இருக்காது. பஸ் ஓட்டுநருக்கு தனி கேபின் வைத்தால், அவசரகாலத்தில் ஓட்டுநர் எழுந்து வந்து மாணவர்களுக்கு உதவ முடியாமல் போய்விடும். எனவே, இந்த விதிமுறைகள் சட்டத்துக்கு முரணாக உள்ளன என்றும் வாதிடப்பட்டது.
என்ன சிக்கல்?
இதையடுத்து நீதிபதிகள், அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன? அதற்கு எப்படி தீர்வு காணலாம்? என்ற விவரங்களை மனுதாரர்கள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...