பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம்
தனது அடுத்த பெரிய சாகசத்தில் தனது அதீத சக்திகளை எப்படிப் பயன்படுத்துவார் என்று அறிய நாம் ஆவலுடன் காத்திருப்போம்” என்று அந்த மின்னஞ்சல் நீளும். ஒரு நாள் எனது தோழி ஒருவர் அப்படிப் பணி நீக்கம் செய்யப்பட்டார். எந்த விளக்கமும் சொல்லாமல், இன்னும் இரண்டு வாரங்களில் அவள் வேலையைவிட்டுப் போக வேண்டும் என்று அவளிடம் சொன்னார் மேலாளர். அவளுக்குப் பிரிவுபச்சார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார்.
அது விநோதமாகவும், குரூரமாகவும் இருந்தது. எனினும், ‘ஹப்ஸ்பாட்’ நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் என்னவோ சகஜமாகவே இருந்தது போல் நடிக்க வேண்டியிருந்தது. நாங்கள் ‘ராக் ஸ்டார்கள்’ என்றும், தாக்கம் தருபவர்கள் என்றும், உலகத்தை மாற்றக் கூடியவர்கள் என்றும் அழைக்கப்பட்டோம். ஆனால், நிஜத்தில் நாங்கள் தூக்கியெறியப்படக் கூடியவர்களாகவே இருந்தோம்.
திமிரான சேதி
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தக் கலாச் சாரத்தைப் பெருமையாகவே கருதுகின்றன. ஊழியர்களை நசுக்கும் சூழலைக் கொண்டிருப்பதால் அடிக்கடி விமர்சனத்துக்குள்ளாகும் ‘அமேஸான்’ நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழே, கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. சமீபத்தில்கூட, ‘எங்கள் நிறுவனத்தின் கடினமான சூழலைப் பிடிக்காதவர் கள் தாராளமாக வேறு நிறுவனத்துக்குச் சென்று விடலாம்’ என்று அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் கூறியிருக்கிறார்.
“எங்கள் அணுகு முறை சரியானது என்று நாங்கள் ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. எங்கள் வழிமுறை அப்படித்தான்” என்று தனது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் தங்கள் மேஜையில் அமர்ந்து அழுவது சாதாரண விஷயமல்ல என்பதையாவது அவர் உணர்ந்துகொண்டதற்கான அறிகுறி அது என்று சிலர் கருதினார்கள். ஆனால், அது தனது போக்கை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்ற திமிரான சேதியும்கூட.
நான் சற்று மூத்தவன் என்பதால், 1980-கள் மற்றும் 90-களின் தொடக்கத்தில் இருந்த நிலை ஞாபகமிருக்கிறது. திறமைசாலிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் தொழில்நுட்ப நிர்வாகிகள் மிகுந்த கவனம் கொண்டிருந்த காலம் அது. “எங்களுடைய மிக முக்கியமான சொத்து, நிறுவனத்தைவிட்டு தினமும் இரவில் வெளியே செல்கிறது” என்று தங்கள் ஊழியர்களைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீண்டகாலம் அது நீடிக்கவில்லை.
நன்கு பயன்படுத்தப்பட்டு, பின்னர் அகற்றப்படும் சாதனங்களைப் போல் ஊழியர்களை நடத்துவது, ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான புதிய உறவின் அடிநாதமாகவே ஆகிவிட்டது. இந்தப் போக்கு, சிலிகான் பள்ளத்தாக்கில் உதயமானது. தற்போது எல்லா திசைகளிலும் பரவிவருகிறது. இந்தப் புதிய பாணி உலகின் பழமையான ஒன்றுதான்: ஊழியர்கள் முதலாளிகளால் சுரண்டப்படுதல்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் கேம்ப்ரிட் நகரில் 2006-ல் தொடங்கப்பட்ட ‘ஹப்ஸ்பாட்’ நிறுவனம், 2014-ல் பொதுப் பங்கு நிறுவனமானது. தற்போது வேகமாக வளரும் நிறுவனமாகவும் செய்திகளில் அடிக்கடி இடம்பெறும் நிறுவனமாகவும் வளர்ந்திருக்கிறது. ‘பீன் பேக்’ வகை சொகுசு நாற்காலிகளும், கணக்கில்லாத விடுப்புகளும் கொண்ட நிறுவனம் அது. அங்கு வேலைதான் வாழ்க்கை; வாழ்க்கைதான் வேலை. பத்திரிகையாளனாக 25 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, ‘நியூஸ்வீக்’ இதழின் உயர்ந்த பொறுப்பில் இருந்துவிட்டு, பின்னர் 2013-ல் ‘ஹப்ஸ்பாட்’ நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு புதிய நிறுவனத்தில் சேர்வது சிறப்பான விஷயம் என்று கருதினேன்.
பின்னர்தான் தெரிந்தது, நான் சேர்ந்தது டிஜிட்டல் தொழிற்சாலை என்று. பெரிய அறைகளில், நீள மேஜைகளில் அருகருகே அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். குனிந்து தையல் இயந்திரத்தை உற்றுப் பார்ப்பதுபோல், மடிக்கணினிகளை உற்றுப் பார்த்துக்கொண்டும், ஹெட்போன் அணிந்தபடி சத்தமாகப் பேசியபடி மென்பொருளை விற்றுக்கொண்டும் இருந்தார்கள்.
குடும்பமல்ல நிறுவனம்
தொழில்நுட்ப ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை. ‘லின்க்டு இன்’ நிறுவனத்தின் நிறுவனர் ரீட் ஹாஃப்மேனின் வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் தொழில்நுட்ப ஊழியராக இருந்தால் ஒரு ‘கடமை சுற்றுலா’வில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்தப் பயணம் ஓராண்டுக்கோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கோ நீடிக்கலாம். ‘தி அல்லயன்ஸ்: மேனேஜிங் டேலண்ட் இன் தி நெர்வொர்க் ஏஜ்’எனும் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.
“உங்களைவிடச் சிறந்தவரோ, அல்லது உங்களைவிடக் குறைவான சம்பளத்துக்குத் தயாராக இருப்பவரோ கிடைத்தால் நிறுவனங்கள் உங்களைத் தூக்கி எறிந்துவிடும்” என்று அப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். “உங்கள் நிறுவனம் உங்கள் குடும்பம் அல்ல” என்பது அப்புத்தகத்தின் மற்றொரு வரி. நிறுவனங்களின் இந்தப் புதிய பாணியைப் பொறுத்தவரை, ஊழியர்கள் முழு ஈடுபாட்டையும், விசுவாசத்தையும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். ஆனால், பதிலுக்கு அந்நிறுவனத்தின் முதலாளி அப்படி எதையும் திருப்பித் தர வேண்டியதில்லை.
‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களில் பணிபுரியும் போதுகூட, முறையான அனுபவம் இல்லாத மேலாளர்களால், சின்னச் சின்னக் காரணங்களுக் காகக்கூடப் பணி நீக்கம் செய்யப்படலாம். வயது, இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடும் மிக அதிகமாக இருக்கும். பாலியல் தொந்தரவுகளும்தான். தின்பண்டங்கள் இலவசமாகக் கிடைக்கலாம்.
ஆனால், ‘உலகத்தையே மாற்றக் கூடிய பணி’ தொடர்பான வெற்று வாசகங்களும், சித்தாந்தமும் உங்கள் மூளையில் நிரப்பப்படுவதை நீங்கள் சகித்துக்கொண்டே ஆக வேண்டும். பணத்தை இழந்துகொண்டிருக்கும் தருணங்களிலும் நிறுவனங்கள் தங்கள் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்றுக்கொண்டிருக்கின்றன. கிடைக்கும் லாபத்தில் பெரும்பங்கு, மேல் மட்டத்தில் இருப்பவர்களிடம் - நிறுவனர்கள், முதலீட்டாளர்களிடமும்தான் போய்ச் சேர்கிறது.
மகிழ்ச்சிப் பரப்புரை
‘ஹப்ஸ்பாட்’ நிறுவனத்தில் எங்கள் அலுவலகம், ‘ஏ.ஹெச். டேவன்போர்ட்’ எனும் அறைகலன் தயாரிப்பு நிறுவனம், 19-ம் நூற்றாண்டில் கட்டிய தொழிற்சாலையைப் புதுப்பித்துக் கட்டப்பட்டது. சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட விசாலமான அந்த அறைகளில் ஒரு காலத்தில், தச்சர்கள் பணிபுரிந்தனர்.
தற்போது அந்த அறைகளில், நாள் முழுவதும் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் நிறைந்திருக் கிறார்கள். கடுமையான மாதாந்திர இலக்குகளை எட்ட வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் அவர்கள். ‘தொழில் வளர்ச்சிப் பிரதிநிதிகள்’ என்று அழைக்கப்படும் அந்த இளைஞர்களுக்கு மாதம் 3,000 டாலர்கள் கிடைக்கின்றன. அதாவது, ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம் உழைக்கும்பட்சத்தில், ஒரு மணி நேரத்துக்குச் சுமார் 18.75 டாலர்கள் கிடைக்கின்றன. எனினும், பலர் அதற்கு மேலும் உழைக்கிறார்கள்.
மேஜை, நாற்காலி போன்ற அறைகலன்கள் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் ஒன்றும் எளிதான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்ல வரவில்லை. ‘ஹப்ஸ்பாட்’ ஊழியர்களுக்குக் கிடைப்பதைப் போல், மதுபானக் கூடம் அவர்களுக்குக் கிடைத்திருக்காது.
ஆனால், மூளைச் சலவை செய்யப்படுவதுபோல் உணர வைக்கும் அளவுக்கு வாரக் கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்கு அவர்கள் போக வேண்டியிருந்திருக்காது. தங்கள் அதீத சக்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்புவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்காது.
என்னைக் கேட்டால், நான் பேசாமல் மேஜை தயாரிப்பையே செய்வேன் என்பேன்!
‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...