மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக
அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்
வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ: காங்கிரஸ் ஆட்சியின்போது மருத்துவ நுழைவுத்
தேர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல
மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முடிவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது.
ஆனால், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசும், இப்போதைய பாஜக அரசும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நிகழாண்டிலேயே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறது. இது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு கிராமப்புற ஏழை மாணவர்களால் போட்டி போட முடியாது என்பதால் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொல்.திருமாவளவன்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு கிராம மாணவர்களையும், சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களையும் வெகுவாகப் பாதிக்கும்.
நாடு முழுவதும் அனைவருக்கும் அடிப்படை கல்வியானது ஒரே தரமும் ஒரே பாடத் திட்டமும் கொண்டதாக வழங்கும் நிலை இல்லை. அத்துடன் இந்தியா முழுவதும் மாணவர்கள் அனைவரும் ஒரே வகையான சமூக பொருளாதாரப் பின்னணிகளை கொண்டவர்களாகவும் இல்லை.
இத்தகைய வேறுபாடுகளை கொண்டிருக்கும் நிலையில் அனைவருக்குமான பொதுவான தகுதி காண் நுழைவுத் தேர்வை நடத்துவது என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு வழக்கு தொடுக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றன. மாநில பாடத் திட்டம், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது மிகவும் கடினம்.
இந்த நடைமுறை நகர்ப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதால் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்ய வேண்டும்
சேலம், ஏப்.29: மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழகத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் 50 ஆண்டுகளாக வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லாமல் சீரழித்து வருகின்றன. இந்த இரு கட்சிகளின் கூட்டணியில் பாமக அங்கம் வகித்தபோது ஆட்சியாளர்களின் தவறுகளையும், ஊழல்களையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.
ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது. தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரக் கல்விக்கும், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குக்கிராமக் கல்விக்கும் வேறுபாடு உள்ளது.
இந்த நிலையில், இரு தரப்பையும் பொதுவாகக் கருதி பொது நுழைவுத் தேர்வு நடத்த முயல்வது சமூக நீதிக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
பொதுப் பட்டியலில் மருத்துவக் கல்வி உள்ள நிலையில், மாநில அரசுடன் பேசி முடிவெடுக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பது மாநிலத்தின் அதிகார வரம்பில் தலையிடுவதாக
உள்ளது.
இந்த நிலையில், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இதே காரணங்களை உச்ச நீதிமன்றத்தில் கூறி பொது மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசு உடனே மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...