Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ACTOR SURYA SELF CONFIDENCE FOR STUDENTS:

        மாணவர்கள் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு:
‘மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. மாணவர்கள் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது’’ என்று பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார்.
பாடல் வெளியீடு
சூர்யா நடித்துள்ள புதிய படம், 24. விக்ரம் குமார் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் சூர்யா பேசியதாவது:-
‘‘எனது ரசிகர்கள் இந்த விழாவுக்கு நிறைய பேர் வந்துள்ளனர். வெளியூர்களில் இருந்தும் வந்து இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களை நான் நீண்ட காலமாக சந்திக்கவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. படங்களில் தீவிரமாக நடித்ததால் வெளியூர்களிலேயே அதிக நாட்கள் இருக்கவேண்டி இருந்தது. அதனால் சந்திப்பதற்கு நேரம் அமையவில்லை.
மாணவர்கள்
என் வளர்ச்சியில் ரசிகர்கள் அக்கறை எடுக்கிறார்கள். படங்களில் நான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களாகிய உங்களுக்கு நான் என்ன பிரதிபலன் செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
இந்த நேரத்தில் மாணவ- மாணவிகளுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். 20 மாணவர்கள் கேள்வித்தாளை பார்த்து பயந்து தேர்வு முடிவு வருவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். என் மனது வலித்தது.
அப்துல்கலாம்
அப்துல்கலாம் வீடு, வீடாக பேப்பர் போட்டவர். ஜனாதிபதியாகவே உயர்ந்தார். நான் படிக்கிற காலத்தில் ஒன்றுக்கும் உதவாமல் இருந்தேன். எதுவுமே தெரியாது. இப்போது வேறு மாதிரி வாழ்க்கை அமைந்து இருக்கிறது. எனவே மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி எல்லோராலும் சாதிக்க முடியும். யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வதற்காகத்தான் படிக்கிறோம். எல்லோருக்கும் நேரம் அமையும். வாய்ப்புகள் வரும்.
விகரம் குமார் ‘24’ படத்தின் கதையை சொன்னபோது கை தட்டி ரசித்தேன். அதனால் நானே தயாரிக்க முன்வந்தேன். ஏ.ஆர்.ரகுமானும் கதையை கேட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்ததை விட இந்த படத்துக்கு அதிகம் அவர் கொடுத்து இருக்கிறார். எல்லோரும் ஒட்டுமொத்தமாக உழைத்து படத்தை நன்றாக கொண்டு வந்துள்ளோம்
நல்ல படங்கள்
ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். நல்ல படங்களை ரசிகர்கள் ஜெயிக்க வைக்க வேண்டும். தவறான படங்களை ஜெயிக்க வைக்க கூடாது. அப்படி செய்தால்தான் நல்ல படங்கள் வரும். நாங்களும் நல்ல கதைகளை தேடி ஓடுவோம். என்னை சுற்றி அறிவாளிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். இந்த படத்தில் அது அமைந்து இருக்கிறது. சமந்தா இதில் அழகாக தெரிவார். நித்யாமேனனும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.’’
இவ்வாறு சூர்யா கூறினார்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘‘சினிமாவில் ஒழுக்கமானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு சூர்யா. நல்ல கதைகளையும் படக்குழுவினரையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்’’ என்றார்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, நடிகைகள் நித்யாமேனன், சரண்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், டைரக்டர் ஹரி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் தேனப்பன், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive