கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்
துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 5-ஆம் வகுப்பு பருவத் தேர்வு வினாத்தாள்கள்,
தேர்வுக்கு முன்பாகவே வெளியாகியுள்ளது குறித்து தேர்வுத் துறை
இயக்குநரிடம் கலை, ஆசிரியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
நடப்பு கல்வியாண்டுக்கான மூன்றாம் பருவத் தேர்வை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி
தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், தொடக்கப்
பள்ளிகளுக்கான தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதியும், நடுநிலைப் பள்ளிகளுக்கான
தேர்வு 30-ஆம் தேதியும் நிறைவடைகின்றன.
இதனிடையே, 3,5,6,7, 8 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு
வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித் துறை மூலம் அச்சிடப்பட்டு, அனைத்துப்
பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வு தொடங்கும்
முன்பாகவே ஏப்ரல் 19-ஆம் தேதி 5-ஆம் வகுப்புக்கான வினாத்தாள்கள் வெளியாகின.
மேலும், தனியார் ஜெராக்ஸ் கடைகளில் ரூ.100, ரூ.200 என விலைவைத்து விற்பனை
செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.
தொடக்கக் கல்வித் துறையால் தயாரிக்கப்பட்டு, உதவி
தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட இந்த வினாத்தாள்
பிரதிகள் எவ்வாறு வெளியாகி, விற்பனை செய்யப்பட்டது என்ற சர்ச்சை
எழுந்துள்ளது. இந்நிலையில், 5-ஆம் வகுப்பின் அனைத்து வினாத்தாள்களுமே
தேர்வுக்கு முந்தைய தினங்களில் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு வருவது
ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு செட்
வினாத்தாள் ரூ.300 வரை விற்கப்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை
ஆசிரியர் நலச் சங்கத்தினர் தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்
அளித்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
கடந்த ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்களுக்கு மாணவர்களிடம் ரூ.30, ரூ.40
என வசூலித்துள்ளனர். இதற்கு ரசீது எதுவும் தரப்படவில்லை. கணக்கு
தணிக்கையிலும் இந்தத் தொகை காட்டப்படவில்லை. அதே போல், ஒவ்வோர் ஆண்டும்
இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
தொடக்கக் கல்வித் தேர்வுகளும் அரசுத் தேர்வுகள்
என்பதால் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமித்தால் மட்டுமே இதுபோன்ற
செயல்களைக் கட்டுப்படுத்த இயலும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால்
மாணவர்களின் மேல்நிலைக் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தேர்வுக்கு
முன்னரே வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி
சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வினாத்தாள் தயாரிப்புக்காகப் பெறப்படும் தொகையில்
பெரும் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி அனைத்து ஆசிரியர்
சங்கங்களின் பொறுப்பாளர்களும் ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
காந்திமதியிடம் கேட்ட போது, கோவை மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாகவே 5-ஆம்
வகுப்பு வினாத்தாள் வெளியானது என்பது தவறான தகவலாகும். மேலும், பள்ளிகளில்
ஆய்வு செய்தபோது மாணவர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அமைதியான முறையில்
தேர்வு எழுதினர். மேலும், முன்னரே வெளியானதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக
வினாத்தாளை மாற்றவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அறிவியல் தேர்வு வினாத்தாள் மாற்றப்படுமா?
கோவை மாவட்டத்தில் 5-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு
புதன்கிழமை நடைபெற்றது. ஆனால், முன்னர் வெளியான அதே வினாத்தாளில் எவ்வித
மாற்றமும் செய்யப்படாமல் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதேபோல்,
வெள்ளிக்கிழமை நடைபெறும் அறிவியல் தேர்வு வினாத்தாளாவது மாற்றப்படுமா என்ற
கேள்வி ஆசிரியர்களிடம் எழுந்துள்ளது.
naasama ponga...
ReplyDelete