Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

                         ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
                       இந்த நிலநடுக்கத்தால் பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், தண்டவாளங்களில் எல்லாம் மண்ணால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
                         ஜப்பானின் தென்மேற்கில் உள்ள கியூஷூ தீவில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.26 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 
                          கியூஷூ தீவுப் பகுதியில் குமமோடோ நகருக்கு கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும் இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன.
                          சனிக்கிழமை அதிகாலையில் மீண்டும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆகப் பதிவானது.
மாஷிகி நகரில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு கருதி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
                   குமமோடோ பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
              கியூஷூ பகுதியில் சென்று கொண்டிருந்த புல்லட் ரயில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் தடம் புரண்டது. இருப்பினும், அதில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அனைத்து ரயில் சேவைகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
              நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் 1,600 ராணுவ வீரர்கள், 2,000 போலீஸ் அதிகாரிகள், 1,300 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 
                       மாஷிகி நகரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீட்டில் சிக்கிய 8 மாத பெண் குழந்தை, 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது.
                              அந்தக் குழந்தையின் தாய், சகோதரன், தாத்தா, பாட்டி ஏற்கெனவே தப்பியபோதிலும், வீட்டின் வேறு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுப்பதற்குள் வீடு முற்றிலும் சரிந்தது.
அந்த இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், கடும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையை மீட்டனர். காயம் எதுவுமின்றி குழந்தை தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
                 நிலநடுக்கம் குறித்து ஜப்பான் அரசு தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கியூஷூ பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 860 பேர் படுகாயமடைந்தனர். அதில், 53 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
                இந்நிலையில், குமமோடோ பகுதியில் 57,000 வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதுவரையில், 32 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive