பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும், 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி
, நாளை முதல், மூன்று நாட்கள், சென்னை, மதுரை மற்றும் கோவையில்நடக்கிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வியின் பாடப்பிரிவு, கல்லுாரிகளின் விவரங்கள் குறித்து வழிகாட்டும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, 'தினமலர்' நாளிதழும், பாரத் பல்கலையும் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த, 'வழிகாட்டி' கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி, நாளை துவங்கி, மூன்று நாட்கள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடக்கிறது. சென்னையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சியும், கருத்தரங்கமும் நடக்கின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், அரங்குகள் அமைக்க உள்ளன.கல்லுாரி மற்றும் பல்கலையில் என்னென்ன படிப்புகள் உள்ளன; கல்லுாரிகளில், 'அட்மிஷன்' பெறுவது எப்படி; கட்டமைப்பு வசதிகள் விவரம் என, 'அப்ளிகேஷன் முதல், அட்மிஷன்' வரை அனைத்து சந்தேகங்களையும், கல்லுாரி பிரதிநிதிகளிடம், நேரடியாக மாணவர் மற்றும் பெற்றோர் கேட்டு அறிந்து கொள்ளலாம்.கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி குறித்த கருத்தரங்கம், காலை,10:00 மணி முதல், 11:30 மணி வரையிலும்; மாலை, 4:00 மணிமுதல், 5:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. இதில், 15க்கும் மேற்பட்ட வல்லுனர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விளக்கம்தருவர்.
இன்ஜி., படிப்புகள் மற்றும் ஐ.டி., தகவல் தொழில்நுட்ப துறையின் எதிர்காலம்; கடலியல் சார்ந்த படிப்புகளில் எப்படி சேர்வது; சி.ஏ., -- ஐ.சி.டபிள்யூ.ஏ., -- ஏ.சி.எஸ்., போன்ற படிப்புகளை எப்படி படிப்பது; ஊடகவியல் அறிவியல்,'அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ்' காட்சியமைப்பு படிப்புகள்.ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வுகள்; தனியார் கல்லுாரிநுழைவுத் தேர்வுகளை எழுதும் முறை; கல்விக்கடன் பெறுவது எப்படி; அதன் விதிமுறைகள் என்ன என்பது குறித்து மாணவர்கள் விளக்கம் கேட்டு பெறலாம்.
வல்லுனர்களிடம் சிறந்த கேள்வி கேட்கும் மாணவ, மாணவியருக்கு, 'வாட்ச், டேப்லெட்'கள் போன்றவை பரிசாக வழங்கப்படும். எந்த கல்வி நிறுவனத்தில், என்னென்ன படிப்புகள் உள்ளன என்ற தகவல் அடங்கிய, 'தினமலர் வழிகாட்டி' புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை.- நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், 'கேன்டீன்' வசதியும் செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...