எளிதான இயற்பியல், பொருளியல் தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன.
மாணவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அறிவியல் பாட மாணவர்களுக்கான கடைசித் தேர்வான இயற்பியலும், கலைப் பிரிவு மாணவர்களுக்கான இறுதித் தேர்வான பொருளியலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் இரு தேர்வுகளுமே எளிதான வினாக்களுடன் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இயற்பியல் தேர்வில் மட்டும் 30 ஒரு மதிப்பெண் வினாக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை மாதிரி, பயிற்சி வினாக்களில் இருந்து கேட்காமல் பாடங்களுக்குள் இருந்து கேட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப் பாடம், ஆங்கிலம் உள்ளிட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களான கணிதம், வேதியியல் உள்ளிட்ட விடைத்தாள்களைத் திருத்தும் பணி வரும் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது.
அனைத்துப் பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 22-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் அதன் பிறகு மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும் என்றும் தெரிகிகிறது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக 18 பேர் பிடிபட்டனர்: தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 18 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
இயற்பியல் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 13 மாணவர்களும், பொருளியல் தேர்வில் முறைகேடுகள் செய்ததாக 5 மாணவர்களும் பிடிபட்டுள்ளனர். அதிகபட்சமாக சேலத்தில் 5 பள்ளி மாணவர்களும், விழுப்புரத்தில் 3 தனித் தேர்வர்களும் பிடிபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...