பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட
பிழைகளால், 22 மதிப்பெண் வரை மாணவர்கள் இழந்து, உயர்கல்வி திட்டம் மாறும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இந்த ஆண்டு மார்ச்
4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. தேர்வில் வினாத்தாள்களில் பல மாற்றங்கள்
இருந்ததால், நுாற்றுக்கு நுாறு என, 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை
கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணை மதிப்பெண்
மேலும், வினாத்தாள்களின் பிழைகளும்,
பாடத்திட்டத்தில் இடம் பெறாத விடைகளுக்கான வினாக்களும் இடம் பெற்று
மதிப்பெண் அளவை குறைக்கும் என தெரிகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள்களின்
திருத்தப்பணி, மார்ச் 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்துள்ளது. விடை
திருத்தத்தில் வேதியியல், கணிதம், விலங்கியல் போன்ற பாடங்களுக்கு போனஸ்
மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, வேதியியலில், 6; இயற்பியலில், 2;
கணிதத்தில், 4; வணிக கணிதத்தில், 10 என மொத்தம், 22 மதிப்பெண்கள், போனசாக
வழங்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த கருணை மதிப்பெண்ணை பொறுத்தவரை, வினா
எண்ணை மட்டும் எழுதியிருந்தால் கிடைக்காது. மாறாக அந்த வினாவில்
பிழையில்லாத பகுதிகளை எழுதியிருக்க வேண்டும்.
அதேபோல், வினாவுக்கான மொத்த மதிப்பெண்ணும்
கருணையாக வழங்கப்படவில்லை. மாறாக, எந்த பிரிவு பிழையாக உள்ளதோ, அதற்கு
மட்டுமே மதிப்பெண்கள் தர உத்தரவிடப்பட்டது.
ஆனால், மாணவர்களோ பிழையான வினாக்களின் எண்ணை
மட்டும், விடைத்தாளில் எழுதி விட்டு, போனஸ் மதிப்பெண் கிடைக்கும் என வந்து
விட்டனர். விடை திருத்தத்தில் இந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்
வழங்கப்படவில்லை.
எனவே, வினா எண்ணை மட்டும் எழுதிய
மாணவர்களுக்கு தேர்வு முடிவு வரும்போது, மதிப்பெண் குறையும் அபாயம் உள்ளது.
அதனால், நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட தாங்கள் நினைத்தபடி,
உயர்கல்வியில் சேர முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னேற்பாடு
இதுகுறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்
கூறியதாவது: வினாத்தாளில் பிழையில்லாமல், பாடத்திட்டத்திற்குள் உட்பட்ட
வினாக்களா என்பதை, அரசு தேர்வுத்துறையின் பொது தேர்வு குழுவினர் ஆய்வு
செய்த பின், அவற்றை அச்சடிக்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல், அச்சுப் பிழைகளை தவிர்க்கவும்
தேர்வுத்துறை உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளின்
கவனக்குறைவால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு, உயர்கல்வி
பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...