பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது. இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணித, அறிவியல் பிரிவுக்கு வேதியியல் பாட தேர்வும்; பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, கணிதப் பதிவியல் தேர்வும் நடந்தது. இதில், வேதியியல் பாட தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில், வினாத்தாள், 'லீக்' ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டி உள்ள முகப்பேர், அம்பத்துார், திருவொற்றியூர், திருமழிசை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், சில தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டும், வினாக்களின் பட்டியல், நேற்று முன்தினம் மாலையில் கிடைத்துள்ளது.
இந்த பகுதி மாணவர்கள், வேறு மாவட்டங்களில் உள்ள தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும் வினாக்களை, நேற்று முன்தினம் இரவில் பகிர்ந்து, விடைகளை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக, பல ஆசிரியர்களிடம் நேற்று முன்தினம், விடைகளை கேட்டுள்ளனர். நேற்று தேர்வு துவங்கிய பின் தான், மாணவர்களும், சில பெற்றோரும் பகிர்ந்து கொண்ட வினாக்கள் அனைத்தும், நேற்றைய வினாத்தாளில் இருந்தது தெரியவந்தது. சில பள்ளிகள், மாணவர்களிடம் வினாத்தாளின் முக்கிய அம்சங்களை மட்டும், நகல் எடுத்து கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர்கள், தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். இந்த புகாரால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள் எப்படி, 'லீக்' ஆனது; யாரால், எந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது என, கல்வித்துறை அதிகாரிகளும், போலீசும் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்தப் புகாரால், வேதியியல் தேர்வு மீண்டும் மறு தேர்வாக நடத்தப்படுமா என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை தொடர்பு கொண்ட போது, ''நாங்கள் மிகவும் பாதுகாப்பாகவே, வினாத்தாள்களை அனுப்புகிறோம்; லீக் ஆவதற்கான வாய்ப்பே இல்லை,'' என்றார்.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சீதாலட்சுமிடம் கேட்ட போது, ''எனக்கு புகார் எதுவும் வரவில்லை,'' என்றார். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டத்தில், முறைகேடு புகாரில், 16 தனித்தேர்வர்கள், ஒரு பள்ளி மாணவர் பிடிபட்டனர்.
Click Here & View Original News
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...