Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்


    'சிந்து பைரவி’ வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில் இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார். 
 
        நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார்.
''என் உடலாகிய வண்டிக்கு நான்தான் டிரைவர். கரடுமுரடான பாதைகளில் வண்டியை ஓட்ட நேரிடலாம். எப்படிச் சாமர்த்தியமாக ஓட்டுகிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமம். இதற்குத் திறமையும் பக்குவமும் முக்கியம். படித்தவை, கேட்டவை, கற்றுக்கொண்டவை, கற்பனை, ஆர்வம் எல்லாவற்றுக்கும் ஒரு ஈடுபாட்டுடன் தீனி போட்டேன். உடலும் மூளையும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிற சூத்திரம் எனக்கு இப்படித்தான் கிடைத்தது.

விடிந்தும் விடியாத காலை நாலரை மணிக்கு எழுந்துவிடுவேன். பிரஷால் பல் துலக்கிய பிறகும், விரலால் ஒரு முறை தேய்ப்பேன். இதனால், பற்கள் ஒரே சீராக இருக்கும். பிறகு காலைக் கடன்களை முடித்துவிட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பேன்.
அமைதியான, பசுமை நிறைந்த போட் கிளப் சாலையில் வாக்கிங் போவதே பேரானந்தமாக இருக்கும். 50 நிமிடங்கள் நல்ல காற்றை சுவாசித்துவிட்டு வரும்போது, உடம்பில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். விழிகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். காலையில் பத்திரிகைகள் படிப்பதுகூட கண்களைக் களைப்பாக்கும்... நீங்கள் கண்களைப் பராமரிக்காமல் இருந்தால்!
விழிகளை இட வலமாக 20 முறையும், மேலும் கீழுமாக 40 முறையும் நன்றாகச் சுழற்றுவேன். பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவுவேன். கண் சோர்வில்லாமல், பார்க்கும் பொருட்கள் 'பளிச்’சென தெரியும். டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இந்தப் பயிற்சி ரொம்பவே நல்லது.
உடல் சுத்தம் உற்சாகத்தைத் தரும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆலிவ் ஆயில் தேய்த்துக் குளிப்பதையும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இன்றும் என் தலைமுடி கருமையாக இருப்பதுடன் வெயிலில் சென்றாலும், உடல் குளிர்ச்சியாக இருப்பதையும் உணர முடிகிறது. 14 வயதில் எனக்குத் தொப்பை இருந்தது. சென்னைக்கு வந்தபோது, 'இந்த மாதிரி தொப்பை இருந்தால் வியாதிதான்’ என்றார் ஒரு பெரியவர். அதனால், யோகா பயில ஆரம்பித்தேன். ஆறே மாதங்களில் 38 வகையான ஆசனங்களைக் கற்றுக்கொண்டேன். 16 வயதில் ஒட்டியானா என்கிற ஆசனத்தைச் செய்து, தொப்பையைக் குறைத்தேன். இந்த ஆசனம் செய்யும்போது வயிறு நன்றாக ஒட்டிவிடும்.
என்றைக்கு நம்மால் குனிய முடியாமல்போகிறதோ, அப்போதே வயதாகிவிட்டது என்று அர்த்தம். வயோதிகம் வந்தால் கணுக்கால், முழங்கால்களில் வலியும் தானாகவே வந்துவிடும். வஜ்ராசனம் செய்வதன் மூலம் வலி இல்லாமல் இருக்கலாம். குனிந்து ஷூவுக்கு லேஸ்கூட கட்ட முடியாமல் போகும் இந்தக் காலப் பிள்ளைகள் வஜ்ராசனம் செய்வது நல்ல பயனைத் தரும். வாரியார் சுவாமிகள் 90 வயது வரை 'வஜ்ராசனம்’ செய்து உடலைக் கம்பீரமாக வைத்திருந்தார்.
சிரசாசனம் செய்வதன் மூலம் மூளை வரை ரத்தம் பாய்வதை உணர முடியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த ஆசனம் செய்வதால் மூளை அதிவேகமாகச் செயல்படும். முதுகை வளைத்து செய்யக்கூடிய புஜங்காசனம் செய்வதால், எலும்புகள் உறுதியாக இருக்கும். இப்படி உடல் உறுப்புகளுக்கான ஆசனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தனை ஆசனங்களும் எனக்கு அத்துப்படி என்றாலும், தற்போது 8 ஆசனங்கள் மட்டுமே செய்துவருகிறேன். ஒரு நாள் யோகா செய்தால், மறுநாள் வாக்கிங் என்று மாறி மாறி செய்வேன்.
பழம்பெருமை பேசுவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. பாராட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை. 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்ற நினைப்பு இருந்தால், எல்லாத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்பது என் அசராத நம்பிக்கை. எதிலும் தாமரை இலைத் தண்ணீர்போல்தான் இருப்பேன். அதற்காக, உறவுகளிடமும் நண்பர்களிடமும் பாசத்தை வெளிப்படுத்துவதில் வஞ்சனை காட்ட மாட்டேன்.
இந்தக் காலப் படிப்புகள் பெரும்பாலும் சம்பாதிக்கத்தான் வழிவகுக்கின்றன. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒழுக்கம் ஆரோக்கியத்தையும் கோட்டை விட்டுவிடுகிறது இன்றையக் கல்விமுறை. படித்து முடித்து கை நிறையப் பணத்தைப் பார்த்ததும் கஷ்டப்பட்டக் காலத்தை மறந்து, பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்தின் மீதும் அலட்சியமாக இருக்கிறார்கள். வயது ஏறும்போது, வியாதிகள் வாட்டும்போதுதான் உடலின் மீதான அக்கறையும் ஆரோக்கியத்தின் மீதான பயமும் நம்மை ஆட்டிப்படைக்கும். மது, புகை, மாது போன்ற எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை. தொழிலுக்காகப் பல பெண்களுடன் நெருக்கமாக நான் நடித்திருந்தாலும், யாருடனும் நான் தவறான உறவு வைத்திருந்தது இல்லை. இதில் எனக்குப் பெருமையும் உண்டு. தவறுகளுக்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அதில் சிக்காமல் மீண்டுவரக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
5 பாதாம், 15 உலர் திராட்சை, 2 பேரீச்சம்பழம், 1 அத்திப்பழம், 1 வால் நட் இவைதான் என் காலை உணவு. அவ்வப்போது நாக்கு கேட்கும் ருசிக்காக இரண்டு இட்லி - பச்சை சட்னி அல்லது பொங்கல் அல்லது ஆசைக்கு ஒரு தோசை - சட்னி சாப்பிடுவேன். மதியம் சாதம், கூட்டு, பொரியல், பச்சடி, கீரையுடன் சப்பாத்தியும் இருக்கும். மாலை 4 மணிக்கு ஜூஸ், இளநீர் குடிப்பேன். எப்போதாவது டீ, பிஸ்கட். இரவு நேரத்தில் வெஜ் சாலட் - சட்னி. நாக்கு கேட்டால் மட்டும் அரிதாக நளபாக விருந்து. அதிலும் எண்ணெய் உணவுகள் அளவோடுதான் இருக்கும். அசைவ உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. வயது ஏற ஏற ஜீரண சக்தி குறையும். 50 வயதை நெருங்குபவர்கள் சைவத்துக்கு மாறுவதுதான் நல்லது. சைவம் சாப்பிடுவதால் உடம்பில் தேஜஸ் கூடுவதை நன்றாக உணர முடிகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம்... ஐந்து கம்பெனிகளுக்கு முதலாளியான ஒரு குஜராத் இளைஞன் திடீரென இறந்துவிட்டான். ஆராய்ந்ததில் அவனுக்கு ஓய்வே இல்லை என்பது தெரியவந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவானாம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதம். மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் என்கிறது மருத்துவ உலகம். தூக்கத்தைத் தொலைத்தால் ஆயுள் குறையும். 9.30 மணிக்குள் படுக்கைக்குச் சென்றுவிடுவேன். படுக்கும்போது, தியானம் செய்வது என் வழக்கம். இதனால் மனம் ஒருநிலைப்பட்டு, நிம்மதியான நித்திரை கிடைக்கும். இப்படி வரைமுறைக்குள் என் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதால் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறது.
வாழ்வில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தேவைகளைக் குறைத்துக்கொள்கிறவனே உண்மையான செல்வந்தன். அதிகம் நான் ஆசைப்படுவது இல்லை. சம்பாத்தியத்தில் ஒரு சிறு பங்கை ஏழைகளுக்கு உதவுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். பாகுபாடு இல்லாமல் பாசத்தைப் பகிர்ந்துகொள்வதே பேரின்பம். இதுவே என் வாழ்வில் நான் கடைப்பிடிக்கும் காயகல்பம்'' என்கிறார் உற்சாகமாக மார்க்கண்டேயன் சிவக்குமார்!
தகவலுக்காக
-புகழ்மணி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive