உலகின் முதல் மலிவு விலை மொபைலை அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அட்காம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதனால், ஒரே நாளில் அந்த ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு கோடிக்கணக்கான நுகர்வோர்கள் ஆன்லைனில் முண்டியடித்ததால், அந்நிறுவனத்தின் இணையதளம் ஸ்தம்பித்து போனது.
இந்த சூழலில் வாடிக்கை யாளர்களிடம் முன்கூட்டியே பணத்தைப் பெற்று அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பணத்தை திரும்ப அளிக்கவும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையாக பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அட்காம், தான் ரூ.3,600 விற்ற ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி ரூ.251க்கு தருவதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தன் நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் பிறப்பிக்கும் வகையில் ரிங்கிங் பெல்ஸ் ஈடுபட்டால், உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இது குறித்து அட்காம் நிறுவன தலைவர் சஞ்சீவ் பாட்டியா கூறும்போது, ‘‘முன்பு ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கு, எங்கள் நிறுவன ஸ்மார்ட் போன் கருவிகளை விற்றது உண்மை தான். அதுவும் ஒரு மொபைலின் விலை ரூ.3,600 ஆகும். தற்போது அந்த மொபைலை தான் ரூ.251க்கு ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விற்க முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், அந் நிறுவனம் காட்சிப்படுத்திய கருவி, எங்கள் நிறுவனத்தின் கருவி போலவே உள்ளது. ஒருவேளை எங்கள் நிறுவன கருவியாக இருந்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
ரூ.251-க்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போனை வழங்காதபட் சத்தில், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத் தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...