நேரு மைதானம் அருகே உள்ள, கண்ணப்பன் திடல் கேள்விப்பட்டதுண்டா? வீடற்றோர் தங்குமிடம். அங்கு, நடைபாதையில், பிளைவுட் கடைகளின் ஓரத்தில் ஒரு சந்து இருக்கும்.
குறுகலான, மிக குறுகலான, மிக மிக குறுகலான அந்த சந்தின்நுழைவாயிலில், மாலை வேளையில், இரண்டு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க, அங்கேயே நாலைந்து வாண்டுகள் ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தனர்.அந்த சூழலை, ஒரு வழியாக சமாளித்துக் கடந்தால், ஒரு ஆள் மட்டுமே நுழையும் பாதையின் இரு மருங்கிலும், 20க்கும் மேற்பட்ட குடிசைகள்.
ஸ்ட்ரீட் சைல்டு கேம்ஸ்:இதில் எது அந்த சிறுமியின் வீடு என, தயங்கியபடியே சென்றபோது தான், 'ஹெப்சிபா வீடா? தோ... மேல இருக்குது பார்' என, அக்கம் பக்கத்து வீட்டினர், மேல் நோக்கி கையைக் காட்டினர்.திகிலும் திகைப்புமாக இருந்த, அந்த கட்டடத்தின் மேலே சென்றால், மொட்டை மாடியில் இருக்கிறது, ஹெப்சிபாவின் வீடு... மன்னிக்க... குடிசை.ஒரு சுவர், அதன் இரு பக்கங்களிலும் இரு குடித்தனங்கள். அவ்விரு வீடுகளும், மேலே தென்னங்கீற்றையும், பக்கவாட்டில் பிளைவுட் தகடுகளையும், தகரங்களையும் மறைத்து உருவாக்கப்பட்டிருந்தன.
வீட்டுக்கு வெளியே செய்தியாளர்கள் காத்திருக்க, பள்ளிச் சீருடையில் மலர்ந்த முகத்துடன் வந்தார் ஹெப்சிபா. கூட்டத்தைப் பார்த்து திகைத்தவரிடம், கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், விவரத்தை எடுத்துச் சொல்ல, பதக்கங்களை அணிந்து, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்தார். பின், பேட்டி துவங்கியது.
இனிமேலும், ஹெப்சிபா யார் என்பதை மறைக்க வேண்டாம் அல்லவா! விஷயம் இதுவே.
சமீபத்தில் பிரேசில் தலைநகர் ரியோ டீ ஜெனிரோவில், உலகெங்கிலும் உள்ள, தெருவோர குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதத்தில், 'ஸ்ட்ரீட் சைல்டு கேம்ஸ்' நடந்தது. அதில் ஹெப்சிபா, பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் தங்கம், 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 110 மீ., தடை தாண்டும் போட்டியில் வெண்கலம் என, மூன்று பதக்கங்களை வென்றார்.
'முதல்ல எனக்கு நம்பிக்கை இல்லை. 100 மீ., ஓட்டத்துல தங்கம் ஜெயிச்சதும், பால் சுந்தர் சார், என்னை கட்டிப் பிடிச்சு பாராட்டினார். எல்லாரும் வாழ்த்து சொன்னாங்க. அப்புறம் எனக்கே என் மேல நம்பிக்கை வந்துருச்சு' என சொல்லும், ஹெப்சிபா, கடைசி நேரம் வரை, பிரேசில் செல்வது உறுதியில்லாமல் இருந்தது. காரணம், தெளிவற்ற முகவரி.ஹெப்சிபாவின் குடும்பத்தினர் முதலில், ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள அல்லிக்குளம் பகுதியில், தெருவோர குடிசையில் வசித்து வந்தனர்.
சென்னை மாநகராட்சி திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், கண்ணப்பன் திடலில் உள்ள, வீடற்றோருக்கான மாநகராட்சி விடுதிக்கு குடிபெயர்ந்தனர். முழுமையான முகவரி இல்லை. இதனால், 'பாஸ்போர்ட்' பெறுவதில் சிக்கல்.ஒரு வழியாக, தமிழக தடகள சங்க தலைவர் தேவாரம் உதவ, 'பாஸ்போர்ட்' சிக்கல் நீங்கியதும், பிரேசில் பறந்தார் ஹெப்சிபா.
'சத்தியமா பிளைட்ல போவேன்னு நினச்சுக் கூட பாக்கல' என, புல்லரிக்கும் அவர், சூளை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் ௧ படிக்கிறார்.
10 வயதில் இருந்து...ஷைனி வில்சனை, 'ரோல் மாடலாக' கருதும் ஹெப்சிபா, 10 வயதில் இருந்து தடகளத்தில் தடம் பதித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:சின்ன வயசுல ஸ்கூல்ல நடந்த ஓட்டப் பந்தயத்துல நான் தான் பர்ஸ்ட் வருவேன். ஜனவரி மாசம், டான் பாஸ்கோ ஸ்கூல் கிரவுண்டுல ஒரு போட்டி வச்சாங்க. அதுல தெருவோரமா இருக்குற பசங்க கலந்துக்கிட்டாங்க. அதுலயும் பர்ஸ்ட் வந்தேன். அதனால, எனக்கு பிரேசில் போறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. பிரேசில் போறதுக்கு முன்னாடி, ஓடும்போது கை எப்படி வச்சிக்கணும் அப்டி, இப்டின்னு ரெண்டு, 'கோச்' எங்களுக்கு, 'ட்ரெயின்' பண்ணாங்க; நல்ல சாப்பாடு குடுத்தாங்க.
இவ்வாறு, உலகம் தன்னை உற்று நோக்கிய கதையை விவரித்தார் ஹெப்சிபா.
இதையெல்லாம் ஒரு ஓரத்தில் நின்றபடி, உள்ளூர ரசித்துக் கொண்டிருந்த ஹெப்சிபாவின் தாயிடம் பேச்சு கொடுத்தோம். 'வீட்டுக்காரர் இல்லைபா. சென்ட்ரல்ல பூ
விக்கிறேன்... எனக்கு நாலு பசங்க' என்றார். 'என்னது பசங்களா...' என, நாம் ஆச்சரியமடைவதைப் பார்த்து, 'நாலுமே பொண்ணுங்கபா…' என, விளக்கினார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம், அந்த ஏரியாவில் இருந்த வாண்டுகள், ஆச்சர்ய கண்களில் பார்த்தனர். அப்போது நிருபர் கேட்ட கேள்விக்கு ஹெப்சிபா, 'வீடு இல்லை. தெளிவான, 'அட்ரஸ்' இல்லை. ஆனா, இப்ப நம்மளாலயும் சாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்துருச்சு' என்றார்.
இதைக் கேட்டதும் ஒரு சிறுவன் எச்சில் விழுங்கிக் கொண்டான்.
பெற்றோர் இருந்தும் அனாதையான அசோக்!
தெருவோர குழந்தைகளுக்கான போட்டியில், ஆண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் அசோக், வெண்கலம் வென்றார். அவர் தற்போது, கருணாலயா அமைப்பில் வளர்ந்து வருகிறார்.
அவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுந்தரஹள்ளி என் சொந்த ஊர். அப்பா, அம்மா சண்டை போட்டு பிரிந்து விட்டனர். அதனால் சின்ன வயதிலேயே வீட்டை விட்டு, ரயிலேறி சென்னை வந்து விட்டேன்.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் திகைத்து நின்றபோது, கருணாலயா அமைப்பினர், என்னை அழைத்து வந்தனர். அவர்கள் மீண்டும் என்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் பிரிந்து விட்டதால், சித்தியிடம் இருந்தேன். ஆனால், அங்கு இருக்க எனக்குப் பிடிக்கவில்லை.
மீண்டும் இங்கு வந்து விட்டேன். அன்று முதல் கருணாலயாவில் தான் வளர்ந்து வருகிறேன். தடகளம், கால்பந்தில் எனக்கு ஆர்வம். 2014ல் பிரேசிலில், உலக கோப்பை கால்பந்து தொடர் நடப்பதற்கு முன், தெருவோர குழந்தைகளுக்கான உலக கோப்பை நடந்தது. அதிலும் நான் பங்கேற்றேன்.தற்போது, இரண்டாவது முறையாக பிரேசில் சென்றுள்ளேன். பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே, பதக்கம் வென்றது திருப்தி அளிக்கிறது. இன்னும் முறையாக பயிற்சி பெற்று, நிறைய சாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடற்ற குழந்தைகளுக்கு அங்கீகாரம்
இந்த சாதனைகளின் பின்புலத்தில் உள்ள, கருணாலயா தொண்டு நிறுவன இயக்குனர் பால் சுந்தர் தெரிவித்ததாவது:பிரிட்டனில் உள்ள, 'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' அமைப்பு, தெருவோர குழந்தைகளுக்கான உலக கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வருகிறது. ஒலிம்பிக், உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கும் இடங்களில், தெருவோர குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்துவது, அந்த அமைப்பின் நோக்கம். அந்த வரிசையில் முதல் முறையாக, 2016 ஒலிம்பிக் நடக்கவுள்ள பிரேசில் தலைநகர் ரியோ டீ ஜெனிரோவில், 'ஸ்ட்ரீட் சைல்டு
கேம்ஸ்' நடந்தது.
அதில் இந்தியா சார்பில், கண்ணப்பன் திடல் பகுதியை சேர்ந்த ஹெப்சிபா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேஷன் சினேகா, பாரெக்ஸ் ரோடு உஷா மற்றும் அசோக் ஆகிய ஐந்து பேர் பங்கேற்றனர்.
இதில், ஹெப்சிபா மூன்று பதக்கங்களும், அசோக் ஒரு பதக்கமும் வென்றனர். பல்வேறு நாடுகளும் கலந்து செயல்பட்ட, தொடர் ஓட்டத்தில் சினேகாவுக்கு ஒரு பதக்கம் கிடைத்தது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிலம்பரசன் போட்டியில் பங்கேற்கவில்லை. தெருவோர குழந்தைகளுக்கான மாநாட்டில், உஷா உரையாற்றினார். இது அங்கிருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.
ஒட்டுமொத்தத்தில், தெருவோர குழந்தைகளின் திறமையை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே, இந்த போட்டிகளின் நோக்கம். ஐந்து பேரை பிரேசில் அழைத்து செல்வதற்கு, போதுமான நிதி எங்களிடம் இல்லை. ஆனால், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், இந்தியாவில் இருந்து சிலர் பங்கேற்க வேண்டும் என விரும்பினர். அதனால், அந்த அமைப்பே, பயணச் செலவை ஏற்றது. அடுத்த முறை, இன்னும் ஏராளமானோர் பங்கேற்க வழி செய்ய வேண்டும்.இவ்வாறு பால் சுந்தர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...