தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை (பி.எஃப்.) பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள
புதிய விதிமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர்
சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, பி.எஃப். சந்தா செலுத்தும் தொழிலாளர் ஒருவர்,
தனது 54 வயதுக்குப் பிறகு சேமிப்புத் தொகையைக் கோர முடியாது. அவர் 57 வயது
வரை காத்திருக்க வேண்டும்.
ஆனால், முந்தைய விதிகளின்படி, அவர் தனது 54 வயதுக்குப் பிறகு 90 சதவீத
சேமிப்புத் தொகையைப் பெற முடியும். எஞ்சிய தொகையை, பணி ஓய்வு பெறுவதற்கு
ஓராண்டுக்கு முன்னரே பெற முடியும்.
மேலும், 54 வயதுக்குப் பிறகு 90 சதவீத சேமிப்புத் தொகையைப் பெறுவதற்கும்
சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவர் கோரும்பட்சத்தில்,
அவரிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அதற்கான வட்டியும் மட்டுமே
வழங்கப்படும். அரசு அல்லது அந்த ஊழியர் சார்ந்த நிறுவனம் சார்பில்
செலுத்தப்படும் தொகையும், வட்டியும் வழங்கப்படாது.
இந்தப் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின்
தொழிற்சங்கமான ஐஎன்டியுசி-யின் துணைத் தலைவர் அசோக் சிங், தில்லியில்
ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தொழிலாளர்களின் மொத்த பி.எஃப். தொகையையும் திருப்பித் தர வேண்டும் அல்லது
பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வட்டி தர வேண்டும். இதை மத்திய தொழிலாளர்
நலத் துறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம் என்றார் அவர்.
மேலும் சில கட்டுப்பாடுகள்: இதனிடையே, மேலும் சில கட்டுப்பாடுகளையும்
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி, ஒருவர் தனது
பி.எஃப். தொகையை ஆயுள் காப்பீட்டில் இணைக்கும்படி கோருவதற்கும் அவர் 57
வயது வரை காத்திருக்க வேண்டும். இந்த வயது வரம்பு இதற்கு முன்பு 55-ஆக
இருந்தது.
தொழிலாளர் ஒருவரின் வைப்பு நிதிக் கணக்கில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணம்
செலுத்தாவிட்டால், அவருடைய கணக்கு செயலிழந்துவிடும். இதனால், ஒரு
நிறுவனத்தில் பணியில் இருந்து விலகிய ஒருவர் வேறு நிறுவனத்தில் சேறுவதற்கு 3
ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அல்லது பி.எஃப். தொகை பிடித்தம் செய்யப்படாத
நிறுவனத்தில் அவர் பணிக்குச் சேர்ந்தாலும், அவரது வைப்பு நிதிக் கணக்கு
செயலிழக்கும் ஆபத்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...