விடைத்தாள் திருத்தும் உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு
மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர்
செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.பி. தங்கவேல் தலைமை
வகித்தார். மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஆர். செல்வம், மாநிலத் துணைத்
தலைவர் எஸ். சேகர், மண்டலச் செயலர் சி. செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை
விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரு விடைத்தாளுக்கு சுமார் 25 நிமிஷங்கள்
செலவிட்டு கவனமாகத் திருத்த வேண்டியுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சம் 20
விடைத் தாள்களைத்தான் திருத்த முடியும். திருத்தும் மையங்களில் உள்ள
குறைகள் ஏராளம். ஆனால், தற்போது விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.7.50 மட்டுமே
வழங்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்
பணிகளுக்கு ரூ. 15 வழங்கப்படுவதுடன் போக்குவரத்துப் படியாக முதல் வகுப்புக்
கட்டணமும் வழங்கப்படுகிறது.
கர்நாடகத்தில் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.15 மற்றும் தினப்படியாக உள்ளூர்
ஆசிரியர்களுக்கு ரூ.125, வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.800 வரை
வழங்கப்படுகிறது. எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான உழைப்பூதியத்தை
ரூ.20 ஆகவும், பயணப் படிகளையும் உயர்த்தி வழங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...