தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பள்ளி மாணவ, மாணவிகளும், 42 ஆயிரத்து 347 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.
இவர்களுக்கான வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடந்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் கட்-ஆப் மதிப்பெண் உயரும் என்பதால் கனவுடன் சென்ற மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததால் ஏமாற்றமடைந்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சென்னையில் வினாத்தாளை கிழித்து எறிந்துவிட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததால் மனவேதனை அடைந்த ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார். வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததை தொடர்ந்து இனிவரும் எந்த தேர்வுகளையும் எழுத மாட்டோம் என்று பெரும்பாலான மாணவர்களும் கூறிவருகின்றனர். இந்தநிலையில் வேதியியல் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசியில் பேசி ஆதங்கப்படுவதுடன், கல்வித்துறை மற்றும் அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லவும் முயன்று வருகின்றனர். இதுகுறித்து சூளைமேட்டைச் சேர்ந்த மாணவர் எஸ்.சஞ்சய்காந்த் கூறியதாவது:- மழையால் புத்தகங்களை இழந்த எங்களுக்கு மாநில அரசு, வேதியியலில் 8 பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி கேள்வித்தாள் அடங்கிய புத்தகத்தை தயாரித்தது. இதனை மட்டும் நன்கு படித்தால் 150 மதிப்பெண்களை எளிதாக பெறமுடியும் என்று கூறியது. புத்தகங்களை இழந்த நாங்கள் இதனை முழுமையாக நம்பி, இதில் உள்ள அத்தனை கேள்விகளையும் ஒன்றுவிடாமல் படித்தோம். ஆனால் அதில் இருந்து வெறும் 25 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதுவும் நேரடியாக கேட்காமல் கேள்வியே புரியாத வகையில் குழப்பும் வகையில் மாற்றி கேட்டுள்ளனர். தேர்வில் 3, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் கடினமாகவே இருந்தது. இவற்றை சிந்தித்து எழுதுவதற்கு நேரமும் போதவில்லை. மாதிரி கேள்விதாள் புத்தகத்தை அரசு தராமல் இருந்து இருந்தால், புத்தகத்தை படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றிருப்போம். ஆனால் இப்படி எங்களை ஏமாற்றிவிட்டனர். குறிப்பாக வினாத்தாளில் கேள்வி நம்பர் 67 ஏ-ல் ‘டயகிராம்’ கேட்கப்பட்டு இருந்தது. அந்த ‘டயகிராம்’ புத்தகத்திலேயே தவறாகத்தான் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற தவறான கேள்விகளை ஏன் கேட்க வேண்டும்? இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல் படிப்புக்கு தேவையான கட்-ஆப் மதிப்பெண் பெறமுடியாததுடன், கவுன்சிலிங் செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டனர். எங்கள் வாழ்க்கையே கேள்வி குறியாகி விட்டனர். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். இதே போல தியாகராயநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தாம்பரம், சூளைமேடு, புரசைவாக்கம் பகுதிகளில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறியதாவது:- வேதியியல் தேர்வு மிக முக்கியமான தேர்வு என்பதால் அரசு அளித்த மாதிரி புத்தகத்தை இரவு பகல் பாராமல் முழுமையாக படித்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். ஆனால் கேள்வித்தாளில் கேட்கப்பட்ட வினாக்களை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளை தான் கேட்டிருக்கிறோம் என்று கூறும் கல்வித்துறை அதிகாரிகள் ஏன் மாணவர்களை குழப்பும் வகையில் கேட்டுள்ளனர்? புத்தகத்திலேயே தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ள கேள்விகளை வினாத்தாளில் ஏன் கேட்க வேண்டும்? இவ்வளவு கடினமாக கேள்விகளை கேட்டு என்ன செய்யப்போகிறார்கள்? வேதியியல் ஆசிரியரே இந்த தேர்வை எழுதினாலும் வெற்றி பெறமுடியாத நிலையில் தான் கேள்விகள் இருக்கின்றன. இதனை ஆசிரியர்களே ஒத்துக்கொண்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை வெள்ளம் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதால் வேதியியல் பாடங்களை வேகம், வேகமாக கடமைக்கு நடத்தி முடித்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. டியூசன் சென்டரில் படித்து தெரிந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் அரசு அளிக்கும் மாதிரி கேள்வித்தாள் புத்தகத்தை பார்த்து படித்து கொள்ளுங்கள் என்று கூறி சென்றதால் தான் மாணவர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்போதே புகார் அளித்தும் எந்த கல்வித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதேபோன்று புத்திகூர்மையுடன் கேள்விகளை கேட்க மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்கள் பயிலவில்லை. தமிழக அரசின் சமச்சீர்கல்வித்திட்டத்தில் தான் பயின்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்டுள்ளோம், மறுதேர்வு நடத்தமாட்டோம், கருணை மதிப்பெண் வழங்கமாட்டோம், 3 முறை பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பிவிட்டோம் என்றெல்லாம் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் பேசுவது மாணவர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு பேசுவதால், மழையால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்துள்ள எங்களுக்கு, தற்போது இவர்களுடைய பதில்கள் மனவேதனை அடைய செய்துள்ளது. அத்துடன் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் கணிதம் தேர்வையும் எழுதுவதற்கு போகமாட்டோம் என்று வேதனையுடன் எங்கள் குழந்தைகள் கூறுகின்றனர். எனவே மற்றொரு தேதியில் வேதியியல் தேர்வை கல்வித்துறை அதிகாரிகள் நடத்த முன்வர வேண்டும். இதுதான் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறைக்கும் நல்லது. இவ்வாறு பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறினர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, “வேதியியல் தேர்வுக்கு பாடத்திட்டத்தில் இருந்து, மாணவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் மறைமுகமாக கேள்விகளை கேட்டுள்ளோம். மறுதேர்வு நடத்தவும், கருணை மதிப்பெண் வழங்கவும் வாய்ப்பில்லை, அரசு அளித்த மாதிரி வினாத்தாள் புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் என்று 3 முறை பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பியுள்ளோம், படித்த மாணவர்களுக்கு எளிதாக இருந்தது, படிக்காதவர்களுக்கு தேர்வு கடினமாக இருந்தது, வேண்டும் என்றால் வருங்காலங்களில் பெற்றோர்கள் கூறியபடி கேள்விகளை கேட்கிறோம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...