சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி கணிதத் தேர்வு நடந்தது. இதில் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டதாக மாணவ, மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கணிதத் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளிலும் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டன. வழக்கமாக லீனியர் புரோகிராமிங் மற்றும் மேட்ரிக்ஸ் பகுதியில் கேள்விகள் எளிதாக கேட்கப்படும். ஆனால், இந்த முறை இந்த பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் கூட மிகக் கடினமாக இருந்தன. எல்லா கேள்விகளுமே மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும், குழப்புவதாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க அதிக நேரமானது. இதனால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க நேரம் இல்லை. வகுப்பில் 100-க்கு 100 எடுக்கும் மாணவர்களுக்குக் கூட இதே நிலைதான்” என்றனர்.
மாணவ, மாணவிகள் கூறிய கருத்தை கணித ஆசிரியர்களும் ஆமோதிக்கவே செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி கணித ஆசிரியர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிதத் தேர்வு மிகவும் கடுமையாக இருந்தது உண்மைதான். கடந்த ஆண்டு கணிதத் தேர்வில் 2 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கடினமாக கேள்விகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது” என்றனர்.
சிபிஎஸ்இ கணிதத் தேர்வு மிகவும் கடினம் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவ, மாணவிகளும் கூறுவதால் இந்த ஆண்டு 100-க்கு 100 மதிப்பெண் வருமா? என்பது சந்தேகம்தான். 100 மதிப்பெண் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட 90 மதிப்பெண் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிதத் தேர்வில் மதிப்பெண் குறைவதால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் எப்படி போட்டிபோட போகிறோமோ? என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கணிதத் தேர்வு எழுதிய வேலூர் மாணவரின் தாயார் பொன்னரசி கூறும்போது, “பொதுவாக சிபிஎஸ்இ தேர்வில் வினாக்கள் கடினமாகத்தான் கேட்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த மாகவே அனைத்து வினாக்களுமே கடினமாக இருந்துவிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணித மதிப்பெண் குறையும் சூழலில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் சேர கடும் போட்டியைச் சந்திக்க நேரிடலாம். எனவே, மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வினாக்கள் மிகவும் கடினம் என்று சொல்வதால், மதிப்பீட்டில் தாராளமும் கனிவும் காட்ட வேண்டும்” என்றார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வு விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. கணித தேர்வு கடினமாக இருந்த விவகாரத்தை உறுப்பினர்கள் பலரும் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதிலளித்து பேசும்போது, ‘‘இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். தேர்வில் குறிப்பிட்ட சில கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்துள்ளன. அவற்றுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களால் கூட சரிவர விடையளிக்க முடியவில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், ‘கேள்விகள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருப்பதால் விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு சிபிஎஸ்இ-யை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...