தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 9.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2
பொதுத் தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 5,600 பள்ளிகளை
சேர்ந்த, 9.25 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள்
விண்ணப்பித்துள்ளனர்; இதற்காக, 2,425 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க, 4,000
பறக்கும் படை மற்றும் நிலையான படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப்
பணிகளில், 50 ஆயிரம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
ஈடுபடுகின்றனர். சென்னையில், 150 தேர்வு மையங்களில், 60 ஆயிரம் மாணவ,
மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
'லீக்' தடுக்க தீவிரம்:கடந்த ஆண்டு, பிளஸ் 2
பொதுத் தேர்வின் போது, கணிதத் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில்,
'லீக்' ஆனது. இந்த ஆண்டு, அது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, தேர்வுத்
துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வினாத்தாள்
வெளியான, ஓசூர் கல்வி மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த
முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு தேர்வில், கணிதம், பொருளியல்,
வேதியியல், வேளாண் செய்முறை போன்ற வினாத்தாள்களில் பிழைகள் இருந்தன.
பொருளியல் வினாத்தாள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தேர்வர்கள் சார்பில்
வழக்கு தொடரப்பட்டு, 'போனஸ்' மதிப்பெண் பெறப்பட்டது. இந்த ஆண்டு அதே போன்ற
பிரச்னை வரக்கூடாது என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
துறையின் குழப்பம்:ஒவ்வொரு ஆண்டும்,
தேர்வுக்கு, ஒரு வாரம் முன், தேர்வு எழுதும் மாணவர்களின் சரியான எண்ணிக்கை
முடிவு செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு பல்வேறு தொழில்நுட்ப கோளாறால்,
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பை,
தேர்வுத்துறை வெளியிடவில்லை.
இது குறித்து விசாரித்த போது,
'அனுமதியில்லாத வகுப்பு மாணவர்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு சலுகை
வழங்குதல்; 'யூனிக் ஐ.டி.,' என்ற தனி எண் தயாரித்தல்; தேர்வு கட்டணம்
செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குதல்; மாணவ, மாணவியரின்
பெயர், விவரங்களில் பிழை திருத்துதல் போன்ற காரணங்களால், நேற்று வரை சரியான
மாணவர் எண்ணிக்கையை முடிவு செய்ய இயலவில்லை' என, அலுவலர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...