கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது.
‘மாற்றுத்திறனாளிகள் அழைக்கிறோம் நாங்க... தேர்தலிலே
வாக்களிக்க வாங்க... அதை அன்போடு சொல்லுறோம் நாங்க... இதை கனிவோடு
ஏத்துக்கணும் நீங்க....’ என்ற வரிகளில் நேர்த்தியான உச்சரிப்பில் பின்னணி
இசையுடன் அந்தப் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், வித்தியாசமாக வாக்களிப்பை
வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் தான் இயற்றிய பாடல் ஒன்றை பாடிக்
கொண்டிருந்தார். அவரது பெயர் எஸ்.லோகநாதன். கோவை ராஜவீதியில் உள்ள துணி
வணிகர்கள் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசையாசிரியராக
பணிபுரிந்து வருகிறார். இசையில் அனுபவமும், ஆர்வமும் கொண்ட பார்வையற்ற
மாற்றுத்திறனாளி.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த,
பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின்
பணிகள் ஒருபுறம் இருக்க, மாற்றுத்திறனாளி ஆசிரியரான இவர், தான் தயாரித்த
விழிப்புணர்வு பாடலை வெளியிடவும் தயாராக உள்ளார்.
தனது பாடலுக்கு ஒப்புதல் பெற கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வந்திருந்த லோகநாதன் கூறும்போது, “2016 சட்டப்பேரவைத் தேர்தலில்
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், தகுதியுடைவர்கள் அனைவரையும் வாக்களிக்க வைக்க
அதிகாரிகள் கடும் முயற்சி எடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில்,
பாடல் இயற்றியுள்ளேன்.
மாற்றுத்திறனாளிகள் அழைக்கிறோம் நாங்க.... எனத் தொடங்கும் அந்தப் பாடலில்
16 வரிகள் இருக்கின்றன. அதனுடன் நாட்டுப்புற சந்தம் இணைந்து மொத்தம் 24
வரிகள் உள்ளன. இந்தப் பாடலை ‘திஸ்ரநடை’யில் (தகிட தகிட தக திமி திமி)
எழுதியுள்ளேன்.
மேலும், நாட்டுப்புற இசைக்கருவிகள் மூலமாக இதற்கான இசைக் கோர்வையையும் சொந்தமாக உருவாக்கி, எனது குரலிலேயே பாடியுள்ளேன்.
அரசியல் கட்சிகளின் சார்பின்றி வாக்குப்பதிவின் அவசியம், முக்கியத்துவம்,
நமது கடமை ஆகியவற்றை மையப்படுத்தியே, இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதல் முறையாக வாக்களிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை
கவரக்கூடியதாக பாடல் வரிகள் இருக்கும். வித்தியாசமான விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள், மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை
உள்ளது” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...