Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேண்டாம் 100க்கு 100 !


      தமிழகத்தில் சென்ற ஆண்டு  12ம்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு காணாத அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 
 
        10ம் வகுப்பில் நாற்பதுக்கும் மேற்ப்பட்டோர் முதலிடம் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 10 லட்சம் மாணவர்களில் அறிவியல் பாடத்தில் மட்டும் 1,00,000 மேற்பட்டவர்கள், கணிதத்தில் 27,000க்கு மேல், சமூக அறிவியலில்  50000 மேல், ஆங்கிலத்திலும் 500க்கும் மேல் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிரமிக்க வைக்கும் இந்த தேர்வு முடிவுகள் பெற்றோர்களுக்கும் கல்வி கூடங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் உண்மையில் இந்த மதிப்பெண்கள் கல்வித் தரத்தை பிரதிபலிக்கின்றதா?என்ற கேள்வி எழுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தேர்வு முடிவுகள் என்பது ஒரு மாணவனின் திறமைக்கு கிடைக்கும் மதிப்பீடு. ஆனால் இன்றைய நிலையில் பந்தையக் குதிரையைத் தயார் செய்வது போல மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு பல விதமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான ராங்குகள் பெறும் இலக்கை நோக்கி ஓட மட்டுமே அனைவரும் தயார் செய்யப்படுகிறார்கள். தற்போது 100க்கு 100 பெற, தேர்ச்சி பெற மாணவர்கள் Best, Average, Slow learners என வகுப்புக்குள்ளேயே தரம்பிரிக்கப்பட்டு பள்ளி வகுப்புகள் போக Morning study, Early morning study, Group study, Midtime reciting, Evening study, Night  study, Holiday study,  Special class, Coaching class என்று சிறப்பு கவன extra வகுப்புகள். இவ்வகுப்புகள் எதை  கற்றுக்கொடுக்கிறது?

“மதிப்பெண்களுக்கும், மாணவர்களின் திறமைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை” என சொல்லும் ஆசிரியர் ஒருவர், ஸ்வாரஸ்யமான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார். கொல்கத்தாவில் நடந்த ஒரு சர்வதேச மாணவர்கள் கூட்டதில் இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் இருந்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை (Toppers) பங்கேற்றனர். மாநாட்டின் துவக்கத்தில் மைக் (microphone) வேலை செய்யவில்லை. உடனே அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் டெக்னிஷியனைத் தேடினார்கள், ஆனால் 7 ஆம் வகுப்பு பயிலும் ஜப்பான் மாணவன் எழுந்து சென்று அதை சரி செய்தான். இந்திய மாணவர்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 7 ஆம் வகுப்பு மாணவனால் செய்ய முடிந்ததை 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்களால் ஏன் செய்ய முடியவில்லை?” இது தான் இன்றைய அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின் நிலை," என்றார். முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற மாணவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் "What is your father? " என்று கேட்டதற்கு 32 பேர் தங்களது தகப்பனாரின் பெயரை பதிலாக கூறினார்களாம்.

இந்த நிலை ஏன் உருவானது? ஒவ்வொரு மாணவனின் தேர்ச்சி என்ற நிலை மாறி 100% தேர்ச்சி, 100/100 அதிகம் என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தும் நிலை ஏன் வந்தது?  மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவன் தன்சுயமரியாதையை இழந்து தன் பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள்களிடத்தில் இருந்து ஒதுங்கும் நிலையை என்னவென்று சொல்வது.TC கொடுப்பதுதான் தீர்வா? 100% தேர்ச்சியை ஏன் கல்லூரிகளுக்கும்,  பல்கலைக்கழகங்களுக்கும் வலியுறுத்துவதில்லை ?

 ஜீன் முதல் டிசம்பர் வரை பாட புத்தகங்கள், தான் எழுதிய நோட்டுகளையும், தன் ஆசிரியரையும், தன்னையும் நம்பிய மாணவன், ஜனவரி முதல்  கையேடுகளையும்,கடந்த வருட வினாத்தாள்களையும்,  ஜெராக்ஸ்களையும் நம்பும்  மாணவனாக மாறுகிறான். மாணவர்கள் திறனறிவு தொடர்பாக எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் சமச்சீர் பாட திட்டத்தில் பயிலும்  மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால் AIIMS,  AIEEE, IIT JEE, BITSAT போன்ற தேர்வுகளில் அவர்கள் சாதிக்க முடியாதது ஏன்? CBSE, ICSE ல் உள்ள கணக்கு மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் கடினம் என கூறுவதன் உள்நோக்கம் என்ன? பாடத்திட்டங்களை அவ்வபோது  சீர்செய்து ஒரேநிலையாக மாற்றப்படவேண்டும் , இல்லையேல் அனைத்து பள்ளிகளும் CBSE அல்லது ICSE பள்ளிகளுக்கு நிகராக  மாற்றப்படவேண்டும்.


ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் எடுப்பது என்பது அப்பாடத்தை பற்றிய அந்த வகுப்புக்கு தகுந்த முழு அறிவையும் அம்மாணவன் பெற்று விட்டதாக தான் கருதுவர். ஆனால் தற்போது ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் எடுப்பது என்பது அப்பாடத்தை (பாடப்புத்தகத்தை) முழுமையாக அப்படியே உள்வாங்கி கொண்டு, தேர்வில் கொட்டி விடுவது தான் என்கிறார்கள் கல்வியாளர்கள். இப்படிப்பட்ட தேர்ச்சியைத்தான் அரசும், கல்வி அதிகாரிகளும் விரும்புகிறார்களா?

இந்த நிலைக்கு மாணவர்கள் படிக்கும் முறை மட்டும் காரணமல்ல. தேர்வு தாள்கள் திருத்தம் செய்யும் முறையும் காரணம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. பெயர் கூற விரும்பாத அந்த ஆசிரியை கூறியதாவது “பன்னிரன்டாம் வகுப்பு விடைத்தாள்களும் சரி பத்தாம் வகுப்பு விடைத்தாள்களும் சரி வேகமாக திருத்த வேண்டியிருப்பதால் விடைத்தாள்களை மேலோட்டமாக பார்த்து திருத்திவிடவேண்டும். மேலும் எங்களுக்கு கொடுத்த 'குறிப்பேடு' (key) வைத்து, அந்த குறிப்பேட்டில் உள்ள வார்த்தைகள் விடைத்தாள்களில் இருந்தால் அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். மேலும் வரைப்படங்களுக்கு (diagrams,graphs) தனி மதிப்பெண்"வழங்க வேண்டும். 30 மதிப்பெண்  பெற்றால் 35 ஆக மாற்றலாம் ! ஆனால் 99 என்றால் 100 போடக்கூடாதாம் ! என்று தெரிவித்தார்.

புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட அந்த ”key” , மாணவர்களின் திறமையை எந்த விதத்தில் மதிப்பீடு செய்ய உதவும். கணித பாடத்திற்கு இந்த முறை பொருந்தும். வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இந்த முறை எப்படி பொருந்தும்? சொந்தமாக சிந்தித்து எழுதும் மாணவர்களின் நிலை என்ன? இப்படிப்பட்ட ”உணராமல் கற்றல்” கல்வி முறை யாருக்கும் பயன்படுவதில்லை.செய்முறைத் தேர்வுகளுக்கு கடும் விதிமுறைகள் உண்டாம் ! ஆனால் முறையாக நடப்பதுதான் சிக்கல்.

ஆங்கிலத்தில் 100/100 எடுத்த மாணவர்களில் எத்தனை பேருக்கு சரலமாக ஆங்கிலம் எழுதவோ பேசவோ தெரியும்? அறிவியலில் 1,15,853 மாணவர்கள், 100 மதிப்பெண் அதாவது முழு மதிப்பெண் எடுத்து இருக்கின்றனர். இதில் எத்தனை மாணவர்களுக்கு மின்னல் எதினால் வருகிறது? வானவில் எப்படி உருவாகிறது? பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? நம் உடலில் என்ன ரசாயன மாற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்? கணிதத்தில் அடிப்படை தெரியாமல் சூத்திரங்களையும், கணக்குகளையும் மனப்பாடம் செய்ய வைத்ததால் இன்று புத்தகத்தில் உள்ள பயிற்சி கணக்குகளையும் ஆசிரியர்களே செய்யக்கூடிய நிலை வந்துவிட்டதே! திருக்குறளை தலைகீழாய் ஒப்பித்து, கூறுபோட்ட மாணவர்களில் எத்தனைபேர் அதை  வாழ்க்கையின் அனுபவமாக மாற்றி இருக்கிறார்கள். ஒழுக்கமுடைமை என்றால் என்ன? பதில் தெரியவில்லை என்றால் 100 தடவை இன்போஷிஷன் (Imposition). அர்த்தம் தெரியாத இந்த  ஒழுக்கமுடைமைக்கு விடை தெரிந்து என்ன பயன் !

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு முடிப்பதற்குள் 42% சதவீத மாணவர்கள் முதல் தேர்விலேயே தோல்வி அடைகிறார்கள் என்று பிரபல தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறினார்களாம். காரணம் 11ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடம் நடத்தப்படுகிறது. வகுப்பில் விருப்பமில்லாமல் செய்த தொடர் மனப்பாட பயிற்சியினால் ஏற்பட்ட சோர்வு என்பது உளவியலாளர்கள் கூற்று. தனியார் பள்ளியில் தான் இந்த நிலை என்றால், அரசு பள்ளிகளிலும் இந்த இந்த 100/100, 100% போட்டி போடும் வேகம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் வைத்து மாணவர்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து அவர்கள் புத்தியை மழுங்கடித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தை ஏற்படுகிறது” என்கிறார்கள் கல்வியாளர்கள். சமீபத்தில் புகழ்பெற்ற பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டுவிழாவில் அப்பள்ளியின் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் கண்ணீருடன் இப்படி கூறினார். இந்த 1st ரேங்கிற்காக நான் செய்த பயிற்சிகளை நினைத்து பார்க்கிறேன். எனக்கு அனைத்து பாடங்களும் மனப்பாடமாக தெரியும். ஆனால் வெளியுலகை மறந்துவிட்டேன். எனக்கு பிடித்த சாப்பாடு, நண்பன், தாத்தா, பாட்டி , விளையாட்டு, இசை, விடுமுறை, தூக்கம், பொழுதுபோக்கு அனைத்தையும் தியாகம் செய்தேன். அனைவரும் கைதட்டினார்கள். ஆனால் அம்மாணவனின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை...

கிராமப்புற மாணவர்களும் பொறியியல், மருத்துவ படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டது. இதனால் 200க்கு 200 பெற மாணவர்களுக்கு புது புது பயிற்சிகள் அளிக்கப்பட்டதே தவிர அதிகம் பாதிப்படைந்தவர்கள் கிராமப்புற மாணவர்களே. கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், புரிந்துப்படிக்கும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், மாணவர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை அரசாங்கம் உணர்ந்து செயல்படுவது அவசியமாக இருக்கிறது.

கற்பிக்கும் முறை, விடைத்தாள்களை திருத்தும் முறை மாற வேண்டும், மாணவர்கள் சிந்திப்பதற்க்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். 9 ம் வகுப்பில் இருந்தே மாணவர்களின் திறன் மற்றும் விருப்பங்களை கண்டறிந்து அதற்கேற்றார்போல் மாணவர்கள் கற்பதற்கான சூழல் உருவாக்க  வேண்டும். நமது நாட்டின் வேலைவாய்ப்பிற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ஏற்ற கல்வி முறை மட்டுமே நமது மாணவர்களை உண்மையான வெற்றியை அடைய உதவும். அதுவரை அவர்கள் குதிரைப் பந்தயத்தில் அதுவும் ஒரு நேர் கோட்டில் ஓட மட்டுமே நாம் சொல்லிக்கொடுத்து கொண்டிருப்போம்...




3 Comments:

  1. A very useful nutshell information highlighting the demerits the current system, but is there a chance for renovation in terms of innovation?

    ReplyDelete
  2. arumai arumai

    ReplyDelete
  3. கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. இது போன்ற கல்வி முறையால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive