Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகம் ' 0' --அ.வெண்ணிலா- கவிஞர்

        நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.

        கடந்த, 28 ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர், அகில இந்திய அளவில், தமிழக மாணவர்களின் நிலை குறித்து, தகவல் அறியும் சட்டத்தில், குறிப்பிடத்தக்க தகவல்களை பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு ஆதங்கங்கள் உள்ளன.
 
*ஒன்று, எய்ம்ஸ் நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில், கடந்த ஆண்டு ஒரே ஒரு தமிழ் மாணவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.
*இரண்டு, 2001 முதல், 2014 வரை, தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் படித்தோரில், 1.2 சதவீதம் பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள். மீதமுள்ள, 98.8 சதவீதம் பேர், தனியார் பள்ளி மாணவர்கள்.

       அவரின் விருப்பங்கள் இரண்டு. மேற்கூறிய இரண்டு ஆதங்கங்களைப் போக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வை, நம் மாநில அரசும் ஏற்று நடத்த வேண்டும். இரண்டாவது, மாநிலம் முழுக்க, அகில இந்திய பொதுத்தேர்வில் நம் மாணவர்கள் வெற்றி பெறும்படி, அனைத்து தமிழக பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது.

        குருவின் மின்னஞ்சலில், எனக்கு மிக அதிர்ச்சியை ஏற்படுத்திய புள்ளி விவரம், நுழைவுத்தேர்வை ரத்து செய்த பின், அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம், 20 சதவீதத்தில் இருந்து, 1.2 சதவீதமாக குறைந்துவிட்டது. பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்களை வைத்து, மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்து விட முடியும் என்ற நிலை வந்த பிறகு, தனியார் பள்ளிகள் அனைத்தும், தங்களின் பள்ளி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி கொடுத்து, அதிக மதிப்பெண்களை வாங்க வைத்து, அரசுப் பள்ளிகளை பின்தங்க வைத்துவிட்டன என்ற உண்மையே, இதன் பின்னணியில் உள்ளது.

       இதே நேரத்தில் தான், நுழைவுத் தேர்வு தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, 2013ம் ஆண்டு, ஜூலை, 18ம் தேதி, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.தமிழக அரசு, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்கான காரண மாக, 'கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புக்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது' என முதல்வர் சுட்டிக்காட்டிய காரணம், குறிப்பிடத்தக்கது. அரசின் விருப்பமும், முயற்சிகளும் இவ்விதம் இருக்க, புள்ளி விவரங்கள் நேர் எதிராக இருப்பதை பார்க்கும்போது, என்னதான் நடக்கிறது தமிழகக் கல்வி முறையில், என்ற குழப்பமே மேலோங்குகிறது.
 
          தமிழகத்தில் கல்வியை போல் சிக்கலாக்கப்பட்ட விஷயம் வேறொன்றும் இல்லை. சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், மாநில அரசு என, பல்வேறு வகையான பாடத்திட்டங்கள், அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என, பல்வேறு நிர்வாகங்கள்.கல்வியை, ஏற்றத்தாழ்வு நிரம்பியதாக வைத்திருப்பதற்கான எல்லா அம்சங்களும் தமிழகத்தில் நிலைகொண்டு விட்டன. இந்த வேறுபாடுகளை களையவே, சமச்சீர் கல்வி திட்டம் வந்தாலும், அதையும் எளிதாக கடந்து போக, தனியார் பள்ளிகள் கற்றுக் கொண்டுள்ளன. நுழைவுத் தேர்விற்கான பயிற்சி, பயிற்சி மையம், நுழைவுத் தேர்விற்கான பாடப்புத்தகங்கள் இவை, எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும், நகரப் பின்னணி கொண்ட மாணவர்களும், பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுமே, நுழைவுத் தேர்விற்காக தயாராகி வெற்றி பெறும் நிலை இருந்தது.
 
         இந்த நிலையை மாற்றுவதற்கு நுழைவுத் தேர்வில்லாமல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு போக முடியும் என்ற நிலையை, தமிழக அரசு உருவாக்கியது.கிராமத்து மாணவர்கள் அறிவுநிலையில் மேம்பட்டு இருந்தாலும், வழிவகைகள் தெரியாததால், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர வழியின்றி இருந்தனர். அதற்காகத் தான், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களை நோக்கும்போது, கிராமத்து ஏழை மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நடுத்தர மாணவர்களும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவந்திருப்பது புரிகிறது.

         காரணம், மாநில அரசின் பொதுத்தேர்வில், நிறைய மதிப்பெண்களை பெற்றுவிட்டால் போதும், எல்லா உயர்கல்வியும் கைவசம் தான். ஆனால், அந்த உயர்கல்வியை, கல்வி வியாபாரிகள், ஒரு நவீன தொழிலாக்கி விட்டனர். பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வாங்கப்படும் கல்விக் கட்டணமும், கெடுபிடிகளும், மாணவர் சேர்க்கைக்கான கடுமையான விதிமுறைகளும், நம்மை மிரட்டுகின்றன.

          பல லட்சங்களை செலவு செய்து, ஒரு ஆண்டின் பாடத்தை, இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து, பிள்ளைகளை ஓயாமல் எழுத வைத்து, முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் வாங்க வைத்து விடுகின்றனர். நுழைவுத் தேர்வு ரத்துக்கு பிறகே, முக்கிய பாடங்களில் நுாற்றுக்கு நுாறு வாங்குவதும்,மொத்த மதிப்பெண்கள் அதிகமானதும் நடந்து வருகிறது. முன்பெல்லாம் ஆயிரம் மதிப்பெண்களை வாங்கவே கண்ணைக் கட்டும். இப்பொழுது பிள்ளைகள், எளிதில், 1,190 மதிப்பெண்ணை தொட்டு விடுகின்றனர் என்றால், அவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டிருக்கிறது என்பதை விட, பயிற்சி மேம்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.
 
         பிளஸ் 1 வகுப்பு பாடங்களை முழுமையாக விட்டுவிட்டோ, அல்லது பெயருக்கு தொட்டு விட்டோ, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிளஸ் 2 வகுப்பு பாடங்களையே, தனியார் பள்ளி மாணவர்கள் படிக்க வைக்கப்படுகின்றனர். அதனால் அதிக மதிப்பெண் என்பது, தரமான கல்வி நிலைக்கான குறியீடு இல்லை.இதில், இன்னொரு முரண்பாட்டையும் கவனிக்க வேண்டும். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை அதிக லட்சங்களை கொட்டி, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கப்படும் மாணவர்கள், உயர்கல்விக்கு, அரசு மருத்துவ, பொறியியல் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். காரணம், அவை, உயர்கல்வியை குறைந்த கட்டணத்தில், தரமாக அளிக்கின்றன. ஆனால், முதல் வகுப்பில் இருந்து, மேனிலைக்கல்வி வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களோ, அரசு மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு போக முடிய வில்லை. இதற்கு, மாணவர்கள் காரணம் அல்ல; மற்றவர்கள் தான் காரணம்.
 
         இந்திய அளவில் தனக்கென பாடத்திட்டம் வைத்துள்ள ஒரே மாநிலம், தமிழகம் மட்டுமே. மற்ற மாநிலங்கள் எல்லாமே, மத்திய அரசின் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. இது மிக நல்ல விஷயமே.அதேபோல், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க, தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததும், பாராட்டுக்குரிய துணிச்சலான முயற்சியே.ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம் முழுமையான பலன் கொடுக்க வேண்டுமானால், அரசு இன்னொரு கடினமான முடிவை எடுக்க வேண்டும். மிக மோசமான விளைவுகளை முதலில் உண்டாக்கும் என்றாலும், துணிந்து அந்த முடிவை எடுத்துவிட்டால், கல்வியின் அநேக குறைபாடுகளை அரசால் உடனே களைந்துவிட முடியும். அதுதான் கல்வியை முழுக்க, முழுக்க அரசுடைமையாக்குவது.
 

  தொடர்புக்கு: vandhainila@gmail.comகட்டுரையாளர்,

 




2 Comments:

  1. கட்டுரையாளரின் கருத்துக்கள் யாவும் உண்மையே. தமிழகத்தில் கல்வி கொள்கையை கல்விக் கொள்ளையாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டணர்...கட்சி பேதமின்றி அனைவரும் கல்வி நிறுவனங்கள் நடத்தி.....AIMS, AIEEE,,JIITE....போன்ற தேர்வுகள் பற்றிய விவரங்கள், அர்சுப்பள்ளியி படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு தெரியாது..தெரி ந்தாலும் அவர்கள் அதற்கான் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை..பல்வேறு காரணிகள் காரணமாக......புற்றீசல்போல் கிளம்பி கல்வியை வியாபாரமாக்கிக் கொள்ளை யடிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களையே...ஒராண்டு பாடத்தினை இரு ஆண்டுகள் நடத்தியும், கோச்சிங் என்ற பெயரில் பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்தும், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கியும்,...உருவாக்குகின்றன. நம் மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் நிறைய பங்கு பெறவேண்டுமெனில் அனைவரிடமு,முக்கியமாக் பெற்றோரிடம்..மாற்றம் வரவேண்டும்.

    ReplyDelete
  2. எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை அதிக லட்சங்களை கொட்டி, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கப்படும் மாணவர்கள், உயர்கல்விக்கு, அரசு மருத்துவ, பொறியியல் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். காரணம், அவை, உயர்கல்வியை குறைந்த கட்டணத்தில், தரமாக அளிக்கின்றன. ஆனால், முதல் வகுப்பில் இருந்து, மேனிலைக்கல்வி வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களோ, அரசு மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு போக முடிய வில்லை........absolutely correct point

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive