புதுக்கோட்டையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கால
வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து
ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், சத்துணவு
ஊழியர்கள் உள்ளிட்ட 937 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை
நிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததுடன் தினமும் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில்
தொடங்கிய தமிழக அரசின இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தங்களது
கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு ஊழியர்கள்
எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழக முதல்வர் எந்த வித அறிவிப்பையும்
வெளியிடாததால் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ள அரசு ஊழியர்கள் தங்களது
போராட்டத்தை பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக்களத்தின் 8 -ஆவது நாளான
புதன்கிழமை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற
போராட்டத்துக்கு, போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர்
கி.நாகாரஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு
உறுப்பினர் வி. திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர்சங்க
மாவட்ட நிர்வாகிகள் க. ஜெயபாலன், சி. கோவிந்தசாமி, தமிழ்ச்செல்வி,
கருப்பையா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்த்துறை அலுவலர்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.நாகராஜன், அங்கன்வாடி
பணியாளர் சங்க நிர்வாகி இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி காமராஜ்
ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள்,
அங்கன்வாடிப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதனப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் 692
பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 937 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...