Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் போராட்டத்துக்கு முழு ஆதரவு: மக்கள் நலக் கூட்டணி அறிவிப்பு

     மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட கோரி ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிகையில், 
 
      "6-வது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பாக 30, 31.01.2016, 01.02.2016 ஆகிய மூன்று நாள்களாக தமிழகத்தின் அனைத்துமாவட்டத் தலைநகரங்களின் ஆர்ப்பாட்டமும், மறியலும் நடந்து வருகின்றது.நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றால் இக்கோரிக்கை நடைமுறைபடுத்தப்படும் என்று மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

          ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியபோது, ஆட்சியில் இருந்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி. அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் எனக் கூறியுள்ளார். இன்று நடைபெறும் போராட்டத்திற்கு கலைஞர் கருணாநிதியும் பொறுப்பு ஏற்க வேண்டும்.மேலும், 6ஆவது ஊதியக் குழுவின் குறைபாடுகள் குறித்து ஆராய கலைஞர் கருணாநிதி ஒரு நபர் கமிட்டியை அமைத்தார். அதிலும் ஆசிரியர்களுக்குத் துரோகத்தையே பரிசளித்தார்.ஆசிரியர் கூட்டமைப்பினரின் மிக முக்கியமான கோரிக்கை தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வு ஊதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

          இதுவும் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் உள்ளது. அதோடு அல்லாமல், மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி திரிபுராவிலும், மேற்கு வங்காளத்திலும் உள்ளது போலவே பழைய ஓய்வு ஊதியத் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.01.01.2004 க்குப் பிறகு பணியேற்ற அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியப் பலன் ஏதும் கிடையாது என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய மத்திய அரசு. இதனை நடைமுறைக்குக் கொண்டுவந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பங்கேற்று, இத்திட்டத்தை அரங்கேற்றியதில் பெரும் பங்கு ஆற்றியவர் தி.மு.க. தலைவர்கருணாநிதிதான்.இதனைத் தமிழகத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவார். தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 7 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்துள்ளார். அப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

         இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு இதுவரையில் சுமார் 2000த்திற்கும் அதிகமானோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அல்லது பணியில் இருக்கும்போதே இறந்துள்ளனர். அவர்களுக்கு இதுநாள் வரையில் பணப் பலன் ஏதும் வழங்கப்படவில்லை.இதுபற்றிக் கேட்டால், கொள்கை முடிவு ஏதுவும் எடுக்கவில்லை என்று அரசிடம் இருந்து பதில் வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இனி என்ன கொள்கை முடிவு எடுக்க முடியும்?01.01.2004 முதல் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் என்ன ஆனது? (CPS) தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத்திலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது? இதுபற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பு பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பதும், ஆட்சிக்கு வந்தவுடன் அதனை வகையாக மறந்து போவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனையே ஆசிரியர்கள் விசயத்திலும் கடைபிடித்து இருக்கிறது.ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மக்கள் நலக் கூட்டணி உளப்பூர்வமான முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.2016 இல் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் சூழலில் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive