பாமக ஆட்சிக்கு வந்தால் சில மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்
எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் முதல்வர்
வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர்
வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துத்துறை அரசு
ஊழியர்களுமே தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கின்றனர். ஆனால், இப்போராட்டங்கள் அனைத்தும் ஏதோ செவ்வாய் கிரகத்தில் நடைபெறுவதைப் போலவும், இவற்றுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என்பது போலவும் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது.அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், செவிலியர்கள் உட்பட பல்வேறு துறையினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஏற்கனவே பல சுற்று போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டு அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களில் கவுரவ விரிவுரையாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சில கூடுதல் கோரிக்கைகள் இருக்கும் நிலையில் அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், போராட்டம் நடத்தும் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளும் பொதுவானது தான்.ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானவை ஆகும்.இந்த கோரிக்கைகள் எதுவும் இன்று புதிதாக முளைத்த கோரிக்கைகள் அல்ல. புதிய ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 01.01.2004 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னோடியாக 01.04.2003 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமை முன்கூட்டியே பறிக்கப்பட்டது. அன்று தொடங்கி 13 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு பணியாளர்களுக்கு 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. அப்போதிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எப்போதோ நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், இரு அரசுகளுக்குமே அக்கறை இல்லாததால் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.2003ஆம் ஆண்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அந்த திட்டத்தை ரத்து செய்வதாகவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதாகவும் வாக்குறுதி அளிக்கிறார். அதை நம்பி அரசு ஊழியர்களும் வாக்களிக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.2001-2006 காலத்தில் அதிமுக அரசால் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் திமுக ஆட்சியில் திரும்பத் தரப்படும் என்று 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் கருணாநிதி அறிவித்தார். அவ்வாறுபறிக்கப்பட்ட உரிமைகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பத் தருவதற்கு 2006-2011 காலத்தில் கருணாநிதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 2009-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதனால் எழுந்த ஊதிய பாகுபாடுகளை களைய வேண்டியது திமுக அரசின் கடமை. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக எதையும் செய்யவில்லை.
தமிழகத்தில் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசு ஊழியர்களுக்கிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்தனர்.அப்போது நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி புள்ளி விவரங்களுடன் வாதாடினார். அதை திமுக அரசு சார்பில் ஏற்றுக்கொண்ட அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
அதற்குப் பிறகும் பல முறை இந்த கோரிக்கைகளை ஜி.கே. மணி வலியுறுத்திய போதும் அவைநிறைவேற்றப்படும் என்று தான் திமுக அரசு உறுதியளித்தது. ஆனால், எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.இத்தகைய வரலாற்றுக்கு சொந்தக்காரரான கருணாநிதி தான்,‘‘கல்லில் நார் உறிக்காதீர்கள். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். காலம் கனியும், காரியம் கைகூடும், காத்திருப்பீர்’’ என்று கூறி இன்னும் ஒரு முறை அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற முயல்கிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை பேச்சு நடத்தக் கூட முன்வராத ஜெயலலிதா, வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இதே வாக்குறுதிகளை மீண்டும் அளித்து வாக்குகளை வாங்க முயற்சி செய்யக்கூடும்.
காரணம்... மக்களின் மறதி தான் அவர்களின் மிகப்பெரிய மூலதனம்.ஆனால், 50 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்து வரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை அடுத்த வாரம் சந்தித்து பேச்சு நடத்த இருக்கும் நான்,பாமக ஆட்சியில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சமூக ஒப்பந்தத்தை செய்து கொள்ளவிருக்கிறேன். அந்த ஒப்பந்தத்தின்படி பாமக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...