சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, அரசு
ஊழியர்களுக்கான பல சலுகைகளை அறிவித்தார். ஆனால், 'முதல்வர் அறிவித்த
சலுகைகள் போதாது' என, அறிவித்துள்ள அரசு ஊழியர் சங்கங்கள், போராட்டத்தை
தொடர முடிவு செய்துள்ளன.
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப
வேண்டும்; சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, தொகுப்பூதியத்தில்
உள்ள பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல் காலவரையற்ற,
'ஸ்டிரைக்' நடத்தி வருகிறது. மறியலை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகங்களில்
காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பத்து நாட்களாக, ஸ்டிரைக்
தொடரும் நிலையில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது
விதியின் கீழ், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான, பல சலுகைகளை
அறிவித்தார். இதனால், போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'முதல்வர் அறிவித்த சலுகைகள் போதாது' என, அறிவித்துள்ள அரசு ஊழியர்
சங்கங்கள், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: முதல்வர்
அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதாக இல்லை; அவை, தேர்தல் கால வாக்குறுதிகள்
போல் உள்ளன; அரசு உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியபோது தரப்பட்ட
வாக்குறுதிகள் தான் அவை. 'வாக்குறுதிகளை அரசு ஆணைகளாக கொடுங்கள்' என்று
கேட்டு தான் போராடுகிறோம்; மீண்டும் வாக்குறுதிகளே தரப்பட்டுள்ளன. இவை,
சட்டசபைத் தேர்தலுக்கு முன், செயல்பாட்டுக்கு வரும் என்பதற்கான உத்தரவாதம்
இல்லை. காலவரையற்ற ஸ்டிரைக், காத்திருக்கும் போராட்டம் தொடரும். கூட்டு
நடவடிக்கை குழுவில் உள்ள சங்கங்களுடன் இன்று ஆலோசித்து, இறுதி முடிவு
எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் அறிவித்த சலுகைகள் என்ன?
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:
* பணி காலத்தில் அரசு அலுவலர் இறந்தால் வழங்கப்படும், 1.50 லட்சம் ரூபாய்
குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக, ஊழியர்களிடம்
மாத ஊதியத்தில் பிடிக்கும் தொகை, 30 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக உயரும்
* அரசு உதவி பெறும் கல்வி நிறுவன அலுவலர், ஆசிரியர், சத்துணவு பணியாளர்,
உள்ளாட்சி அமைப்பு மற்றும் கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு, குழு
காப்பீட்டின் கீழான காப்பீடு, 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, மூன்று லட்சம்
ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக, மாத ஊதியத்தில் பிடித்தம், 30 ரூபாயில்
இருந்து, 60 ரூபாயாக உயரும்
* கருணை அடிப்படையில், 2016, பிப்.,1 வரை நியமிக்கப்பட்டோரின் பணி
நியமனத்தை முறைப்படுத்த, அரசு ஆணை வெளியிடப்படும். தமிழ்நாடு அரசு
தேர்வாணையத்தின் அனுமதி பின்னர் பெறப்படும். விதி தளர்வு செய்து, பணியை
முறைப்படுத்த வேண்டியோருக்கு, ஊதிய உயர்வு உடனடியாக அளிக்கப்படும்.
இவர்களின் பணி பின்னர் முறைப்படுத்தப்படும்
* சத்துணவு அமைப்பாளர், ஓய்வு கால பணப்பலன், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து,
60 ஆயிரம் ரூபாய்; சமையலர் மற்றும் உதவி சமையலர் பணப்பயன், 20 ஆயிரம்
ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
* ஊரக வளர்ச்சி துறையில் பட்டயப் படிப்பு முடித்து மேற்பார்வையாளராக
உள்ளோருக்கான பதவி உயர்வு மூப்புக் காலம், 10 ஆண்டில் இருந்து, ஏழு
ஆண்டுகளாகவும்; பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு, ஐந்து ஆண்டில் இருந்து,
நான்கு ஆண்டுகளாகவும் குறைக்கப்படும்
* உடற்பயிற்சி ஆசிரியர், இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குனராக பதவி உயர்வு
பெற, கணக்கு தேர்வு பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை
நீக்கப்படும்
* மருத்துவ கல்லுாரியில் உள்ள, 157 இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படும்.
* தொகுப்பூதியத்தில் பணியாற்றும், 1,500 செவிலியர்களுக்கு, பணி மூப்பு
அடிப்படையில், கால முறை ஊதியம் அளிக்கப்படும். 605 கிராம சுகாதார
செவிலியர்களுக்கு, சுகாதார செவிலியர் பதவி உயர்வு அளிக்கப்படும்
* அரசு கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ஊதியம், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
* அரசு ஊழியரின் பணிசார்ந்த வழக்குகளை விசாரிக்க, நிர்வாக தீர்ப்பாயம் மீண்டும் உருவாக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.
ஓய்வூதிய திட்டத்தைபரிசீலிக்க வல்லுனர் குழு
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:
* 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை
செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை குறித்து, தீவிரமாக ஆராய்ந்து
பரிந்துரை செய்ய, வல்லுனர் குழு அமைக்கப்படும். இக்குழு பரிந்துரைப்படி
முடிவு எடுக்கப்படும்
* அரசு பணியில், 2003 ஏப்.,1 முதல் சேர்ந்த, அலுவலர்களிடம் இருந்து
பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை, அதற்கு அரசின் பங்களிப்பு தொகை,
இவற்றுக்கான வட்டியும், அரசின் கணக்கில், தனியே வைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பணி ஓய்வு பெற்றோர், இறந்தோர் வாரிசுகளுக்கு, வழங்க
வேண்டிய தொகை உடன் வழங்கப்படும்
* ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்தல்; தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை
ஊதியத்துக்கு மாற்றுதல்; சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு, முறையான
காலமுறை ஊதியம் வழங்கும் கோரிக்கைகள் உள்ளன. இந்த கோரிக்கைகளை அரசு
அலுவலர்களின் ஊதிய விகிதங்களோடு ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை, ஒப்பு
நிலையைக் கருத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். இதை ஊதிய குழு தான் செய்ய
முடியும் என்பதால், எதிர் வரும் ஊதிய குழு பரிசீலிக்கும்.இவ்வாறு ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட, குப்புசாமி, மயங்கி விழுந்து இறந்தார். முதல்வர்
அறிவிப்பில், தங்களின் கோரிக்கை ஏற்கும் அறிவிப்பு ஏதும் இல்லாததால்,
அதிருப்தி அடைந்துள்ள மாற்றத்தினாளிகள், சட்டசபைக்கூட்டத்தில், இன்று
தங்களுக்கான அறிவிப்பு வௌியாகும் என, நம்பிக்கையில் உள்ளனர்.
பெரிய ஏமாற்றம்; போராட்டம் தொடரும்!'முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு;
போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி' என, தெரிவித்துள்ள ஆசியர்கள்
சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
'பெரும் ஏமாற்றம்':
''முதல்வரின் புதிய அறிவிப்பில், ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும்
ஏற்கப்படவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரினால், வல்லுனர்
குழு அமைப்போம் என அரசு ஏமாற்றி விட்டது. தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி
வரன்முறை குறித்த அறிவிப்பும் இல்லை. ஓராண்டாக போராடும் எங்களுக்கு இது
பெருத்த ஏமாற்றம்; போராட்டம் தொடரும். -இளங்கோவன், ஒருங்கிணைப்பாளர்,
'ஜாக்டோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு.
'கண் துடைப்பு':
அரசுக்கு நிதி இழப்பு இல்லாத, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுவது
பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான குழு
எப்போது விசாரித்து, முடிவு எப்போது கிடைப்பது; இது கண்துடைப்பு;
போராட்டத்தை திசை திருப்பும் செயல். - பேட்ரிக் ரைமண்ட், பொது செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
'வெற்று வாக்குறுதி':
''பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில்,
வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது குழு அமைப்போம் என்பது, வெற்று
வாக்குறுதி. மேலும், மத்திய அரசுக்கு இணையாக ஊதிய முரண்பாட்டை சரி செய்வது
பற்றி அரசு மவுனமாக உள்ளதால், போராட்டம் தொடரும். - சாமி சத்தியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.
'அரசுக்கு மனமில்லை':
''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை கூட அரசு ஏற்கவில்லை.
ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு மனமில்லை. எங்கள் போராட்டம்
நிற்காது; ஸ்டிரைக்கில்,'ஜாக்டோ' சங்கங்கள் ஒன்றிணைந்து வர வேண்டும். -
கே.பி.ஓ.சுரேஷ், தலைவர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்': ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது
பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு,
ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்
சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர்
சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, வேலைக்கு வராமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட
ஊழியர்கள், ஆசிரியர்களிடம், எந்த விளக்கமும் கேட்காமல் சம்பளத்தை
பிடிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிக் கல்வி
மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.ஆசிரியர்களின் பணி
புத்தகத்திலும் அவர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தகவலை பதிவு செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்றவர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கவும், பதவி உயர்வு மற்றும் பணப்பலன் சலுகைகளை ரத்து
செய்வது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...