அரசு
பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில
குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும், 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர். தேர்வெழுதும் போது, அதில் சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால், அவர்கள் எழுதிய விடைத்தாள் முழுவதிலும், குறுக்கு கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதன் மூலம், அவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தில், 'பெயில்' ஆவதால், உடனடி தேர்வெழுதி, அதில் சென்டம் பெற முயற்சிக்கின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ப்பதற்காக, பிளஸ் 2 மாணவர்களை சென்டம் எடுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும், 'டுடோரியல்' நிறுவன ஆசிரியர்கள், இது போன்ற, 'ஐடியா'க்களை தருகின்றனர்.
மாணவர்களின் இந்த குறுக்கு வழியை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதிவிட்டு, அந்த விடைத்தாளை குறுக்கு கோடிட்டு, முழுவதுமாக அடித்து விட்டால், அது ஒழுங்கீனமாகக் கருதப்படும். இந்த ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்து வரும், இரண்டு பருவத்துக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:
தேர்வுத் துறை விதிகள் என்ன என்பதை, எந்த பெற்றோருக்கும் தெரிவிப்பதில்லை. எந்த அடிப்படை தகவல்களையும் இணையதளத்தில் வைக்கவில்லை. தேர்வு கால அட்டவணையை கூட பதிவேற்றம் செய்யவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அடிப்படை தகவல்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில், எந்த விதியையும் பின்பற்றாமல், யாரிடமும் கருத்து கேட்காமல், புதிய தண்டனை விவரங்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை, உடனே வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.'கிரிமினல்கள் போல் பார்ப்பதா?'தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நல சங்க தலைவர் எஸ்.அருமை நாதன் கூறியதாவது:
தேர்வுத் துறை தன் விதிகளை, அனைவருக்கும் தெரியும்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். அதே போல், மாணவர்களுக்கு முன்கூட்டியே விதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு, விதிகளை விளக்கமாக எழுத்து மூலம் காட்டியது இல்லை.
'விடைத்தாளை அடித்தால், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத தடை' என்ற அறிவிப்பு, மாணவர்களை விபரீத உணர்வுகளுக்கு கொண்டு செல்லும். மாணவர்களை கிரிமினல்களை போல் பார்க்கும் மனப்போக்கை தேர்வுத் துறை மாற்ற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...