Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் -அமைச்சர்கள் சமரச முயற்சி

       தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்றுமுதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். 
 
                 அதனால், போராட்டத்தைத் தவிர்க்க, அரசு ஊழியர்கள் சங்கங்களை, நேற்று, அமைச்சர்கள், அவசர அவசரமாக பேச்சுக்கு அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.கோரிக்கைகள் பலவற்றை வலியுறுத்தி, 68 சங்கங்கள் ஒன்றிணைந்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

          எனவே, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதேபோல் வணிகவரித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என, பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் குதித்தனர்.

தனித்தனியே...:

          இதனால், அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டது. தாமதமாக விழித்துக் கொண்ட அரசு, போராட்ட அறிவிப்பு வெளியிட்ட சங்கங்களுடன், சமரசம் செய்ய முடிவு செய்தது.மூத்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் அடங்கிய, ஐவர் அணியினர், தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர், நேற்று பகல், 12:00 மணி முதல், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், தலைமைச் செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகளை, தனித்தனியே அழைத்து பேசினர்.பேச்சு முடிந்த பின், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க தலைவர் கணேசன் ஆகியோர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், சென்னை சேப்பாக்கத்தில், உண்ணாவிரதம் இருந்தோம். அன்று மாலை, தலைமைச் செயலர் ஞானதேசிகன்,அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அழைத்து பேசினர்; மறுநாள் பேச்சுக்கு வரும்படி கூறினர்.அதன்படி, பேச்சில் பங்கேற்று, எங்கள் கோரிக்கைகளை தெரிவித்தோம். கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட அமைச்சர்கள், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அவற்றை நிறைவேற்ற உரிய அரசாணை பிறப்பிப்பதாக தெரிவித்தனர். பேச்சு திருப்திகரமாக அமைந்ததால், இன்று துவங்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், எங்கள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தீவிர முயற்சி:

          ஆனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேசவில்லை. இதனால், அவர்கள் திட்டமிட்டபடி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என, அறிவித்தனர். அதிர்ச்சி அடைந்த, அமைச்சர்கள் குழுவினர், இரவு, 7:00 மணிக்கு, அவர்களை பேச்சுக்கு அழைத்தனர். அதற்கு முன், மாலை, 6:00 மணிக்கு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடந்தது. கடைசி கட்டமாக, அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி, போராட்டத்தை தவிர்க்க, அமைச்சர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ரூ.2,000 கோடி வரி வசூல் பாதிப்பு:

               வணிக வரித் துறை ஊழியர்களின் போராட்டம், ஒரு வாரமாக நீடிப்பதால், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கான வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.வணிக வரித் துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணி மூப்பு குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரி, வணிக வரித் துறை ஊழியர்கள், பிப்., 3 முதல், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பிப்., 5முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர். ஒரு வாரமாக போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இணை ஆணையர் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வணிக வரித்துறையின் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. அரசுக்கு, ஒரு வாரத்தில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வணிக வரித்துறை ஊழியர்களையும் நேற்று மாலை, அமைச்சர்கள் குழு, பேச்சுக்கு அழைத்திருந்தது. ஆனால், இரவு, 8:00 மணி வரை,பேச்சு துவங்கவில்லை.

'பட்ஜெட் வரை பொறுத்திருங்கள்':

         ஆசிரியர் சங்கங்களுடன், ஐந்து அமைச்சர்கள், பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் பேச்சு நடத்தினர். அப்போது, 'வரும், 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள்; அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதை, ஆசிரியர் சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

          'ஜேக்டோ' நிர்வாகி தியாகராஜன், ''அமைச்சர்கள் கூறியதை ஏற்று, பிப்., 16 வரை பொறுத்திருக்க உள்ளோம். அதன் பிறகும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive