தமிழக அரசினை கண்டித்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நாளை முதல்
காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடஉள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் 2
நாட்கள் மூடப்படுவதால் மையங்களில் உணவு சாப்பிடும் 85 லட்சம் மாணவர்கள்
பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் பள்ளி
சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள்
செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் சுமார் 2.5 லட்சம்
ஊழியர்கள்பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும். வாழ்க்கை தரத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் தொகையில் மாற்றம் செய்து அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பணிசுமைக்கு ஏற்ப சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்து பல முறை மனு அளித்தும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து பல கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அரசு அப்போதும் கண்டுக்கொள்ளவில்லை.அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை தடுக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை.
போராட்டம் குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு இணை கன்வீனர் மு.வரதராஜன் கூறியதாவது: அரசின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் திட்டமிட்டப்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 1 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தின்போது முதல் கட்டமாக நாளையும் நாளை மறுநாளும் மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.12ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.
அதன் பிறகும் அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்தக்கட்டமாக அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி ஒருமுடிவை அறிவிப்ேபாம். அதாவது, சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு வரதராஜன் கூறினார். தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் தினமும் சுமார் 85 லட்சம் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குதல், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு பணி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும்.
விடுமுறை எடுக்க உத்தரவு
போராட்டத்தை ஓடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அரசின் நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் அஞ்சவில்லை. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்போர் விடுப்பு எடுத்து செல்லும்படி சமூக நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...