Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சி 3-வது இடத்தை பிடித்தது எப்படி? மாநகராட்சி மேயர் பேட்டி:

       தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சிக்கு 3-வது இடம் கிடைத்தது எப்படி? என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெயா பேட்டி அளித்து உள்ளார்.
 
திருச்சிக்கு 3-வது இடம்
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டு சிறந்த நகரங்கள் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாநகராட்சி அகில இந்திய அளவில் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. மதுரை 26-வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்த தகுதிடைய பெற திருச்சி மாநகராட்சி எப்படி தேர்வு செய்யப்பட்டது? என்பது பற்றி திருச்சி மாநகராட்சியின் மேயர் ஜெயாவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் பேட்டி கண்டார்.
நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு மேயர் ஜெயா அளித்த பதில்களும் வருமாறு:-


தேர்வானது எப்படி?

கேள்வி:- எந்த அடிப்படையில் திருச்சி தூய்மை இந்தியா பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து உள்ளது?

பதில்:- திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தில் சுமார் 1500 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அன்றாடம் குப்பைகளை அகற்றும் முறை, சிறப்பான கழிவறை, சுகாதார மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இதனை கடந்த மாதம் மத்திய அரசு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். சுமார் ஒரு லட்சம் பேரிடம் கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி 3-வது இடத்திற்கு தகுதி பெற்றது.

சரிவா?

கேள்வி:- கடந்த ஆண்டு தூய்மையான நகரம் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த திருச்சி இந்த ஆண்டு 3-வது இடத்திற்கு சென்று இருப்பது ஒரு சரிவு தானே?

பதில்:- கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி இந்த ஆண்டு முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஆய்வு குழுவினர் போட்ட மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைந்து விட்டதால் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கும், 3-வது இடத்திற்கும் ஒரு மதிப்பெண் தான் வித்தியாசம் என்பதால் இதனை சரிவு என கூறமுடியாது.

முதலிடத்தை பிடிக்க வழி என்ன?

கேள்வி:- தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடத்தை பிடிப்பதற்கு நீங்கள் வகுத்து இருக்கும் திட்டம் என்ன?

பதில்:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி திருச்சியை முதலிடத்துக்கு கொண்டு வர பல திட்டங்களை வைத்து இருக்கிறேன். கடந்த 4½ வருட மக்கள் பணிக்கு இப்போது பரிசு கிடைத்து இருக்கிறது. பொதுமக்கள், குப்பை தொட்டியில் தான் குப்பைகளை போட வேண்டும். கழிப்பறையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனை அனைவரும் பின்பற்றினால் திருச்சி நிச்சயம் முதலிடத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மேயர் பேட்டி

இந்திய அளவில் மதுரை 26-வது இடம் பிடித்தது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

அம்மா திட்டம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சியின் பல்வேறு பணிகளுக்கு தாராளமான நிதியினை வழங்கி வருகிறார். அவர் வழங்கிய சிறப்பு நிதி ரூ.250 கோடி மூலம், கடந்த தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்த வாய்க்கால் தூர்வாரும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பணிகளால், குப்பை கிடங்காக இருந்த வாய்க்கால்கள் முழுவதும் சீரமைக்கப்பட்டன.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், இங்கு துப்புரவு பணி என்பது சற்று கடினமான பணி தான். இருப்பினும் குப்பையில்லா நகரமாக மாற்ற, ‘‘அழகிய மதுரை மாநகர் என்கிற அம்மா திட்டத்தையும்”, ‘‘மாசில்லா மதுரை” என்ற திட்டத்தையும் செயல்படுத்தினோம். அம்மா திட்டத்தின் கீழ் பணியாற்ற புதிதாக 200 பேர் கொண்ட துப்புரவு ஊழியர்கள் குழு அமைத்தோம். இதன் மூலம் வாரந்தோறும் 2 வார்டுகளை தேர்வு செய்து அங்கு முழு அளவிலான துப்புரவு பணி செய்தோம். இதன்மூலம் நீண்ட காலமாக தேங்கி இருந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

குப்பை கழிவுகள்

அதே போல் ‘‘மாசில்லா மதுரை” திட்டத்தின் மூலம் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் அடிக்கடி துப்புரவு பணி செய்து வருகிறோம். இந்த 2 சிறப்பு திட்டங்கள் தவிர, அன்றாடம் நகரில் குப்பை அள்ளும் பணியினை தீவிரப்படுத்தினோம்.

முதற்கட்டமாக குப்பைகள் சேகரிப்பதற்கு தேவையான அனைத்து வாகனங்கள் மற்றும் எந்திரங்களை புதிதாக வாங்கினோம். அனைத்து சாலைகளிலும் மக்கள் பயன்படுத்தும்விதமாக குப்பைத் தொட்டிகளை வைத்தோம். அந்த தொட்டியில் சேரும் குப்பைகளை தினமும் தொய்வின்றி எடுத்து உரமாக்கினோம்.

நவீன கழிப்பறைகள்

அதேபோல் பழைய மாநகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைத்து இருக்கிறோம். சேதம் அடைந்து இருந்த குழாய்களை புதுப்பித்தோம். இதன் காரணமாக சாலைகளில் கழிவுநீர் செல்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் நவீன கழிப்பறைகளை அமைத்து சுத்தமாக பராமரித்து வருகிறோம்.

இதுபோன்ற தொடர் பணிகளாலும், அம்மா திட்டத்தின் மூலமும் மாசில்லா மதுரை நகரை உருவாக்கி இருக்கிறோம். இந்த இலக்கை அடைந்ததற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலே காரணம்.

ஆனால் அதற்கு முன்பே, கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது வழங்கியதே எங்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். தொடர்ந்து நகரை சுத்தமாக பராமரித்து, மதுரையை இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive