மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல்
தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று
காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர்.
மூன்று லட்சம் ஊழியர்கள்
ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன.புதிய ஓய்வூதிய
திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி,
சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை
சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.
அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு செயல்படுத்தாததாலும், ஆட்சிக்காலம் முடிய உள்ளதாலும், தற்போது போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற, ஐவர் அணி பேச்சு நடத்தியது. ஆனால், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.'அரசாணைகள் தர நீங்கள் முயற்சியுங்கள்; நாங்கள் போராட்டத்தை துவக்குகிறோம்'எனக்கூறி, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று திட்டமிட்டபடி, காலவரையற்ற ஸ்டிரைக் துவங்கியது.இந்த சங்கத்தில், வருவாய் துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி என, 68 சங்கங்கள் உள்ளன. வணிக வரித்துறையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, ஸ்டிரைக் நீடிப்பதால், ஏற்கனவே பணிகள் முடங்கி, வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் மற்ற துறைகளிலும் பணிகள் முடங்கின. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தபோராட்டத்தில், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும் பங்கேற்றனர். இதனால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்துணவு வழங்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஓய்வு பெற்றஊழியர்கள் மற்றும் வெளி ஆட்கள் மூலம், பல இடங்களில் சத்துணவு வழங்கும் பணி நடந்தது. அரசு ஊழியர்கள், மூன்று லட்சம் பேர் வரை பங்கேற்றதால், அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கின.
'அரசாணை கிடைத்தால் ஸ்டிரைக்கை முடிப்போம்' :
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்செல்வி கூறியதாவது: மூத்த அமைச்சர்கள் பேச்சு நடத்திய போது, 'கோரிக்கையை முதல்வரிடம் கொண்டுசெல்கிறோம்' என்றனர்; அமைதியாக, சுமூகமாக பேசினர். ஆனால், உறுதியான முடிவு கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கி உள்ளோம்.புதிய ஓய்வூதிய திட்டப்படி, ஓய்வு பெற்ற, இறந்த, 6,000பேருக்கு இதுவரை, பணப்பயன் கிடைக்கவில்லை. கோரிக்கைகளை ஏற்று, அரசாணைகள் ஓரிரு நாளில் கிடைக்கும் என,நம்புகிறோம். அரசாணைகள் கிடைத்தால், ஸ்டிரைக்கை கைவிட தயார்; அரசுப் பணிகளை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில், அரசு அலுவலர் ஒன்றியம், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ' உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கவில்லை. காலவரையற்ற ஸ்டிரைக் நீடித்தால், பணிகள் முடங்கி, அரசுக்கு பெரும் சிக்கலாக அமையும்.
'நசுக்கப்படுகிறோம்':
தமிழகத்தில், 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கம் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. ஆனால், பதிவுத்துறைபணியாளர் சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.
பதிவுத்துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பதிவுத்துறையில், 50 ஆயிரம் பேர் உள்ளனர். பதிவுத்துறை சங்கங்கள் ஆரம்பத்தில், போராட்டங்களில் தீவிரம் காட்டி வந்தது.கோரிக்கை மனு கொடுக்கச் சென்றாலும், போராட்ட, 'நோட்டீஸ்' தரச்சென்றாலும், துறைத் தலைமை யாரையும் சந்திப்பது இல்லை. சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறி வைத்து பழி வாங்கப்படுகின்றனர். எனவே, கோரிக்கை குறித்து குரல் எழுப்பக்கூட முடியாமல் நசுக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...